முதல்முறையாக அமித் ஷாவைச் சந்தித்த முதல்வர் விஜய்.. கோவலத்தில் நடந்த சந்திப்பு.. பின்னணி என்ன?
CM Vijay meets Amit Shah: சென்னை கோவலத்தில் தென்மண்டல முதல்வர்கள் மாநாட்டிற்கு வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் முதலமைச்சர் விஜய் இரவு விருந்தில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து அமித் ஷாவைத் தனியாகச் சந்தித்து மாநில நலன் சார்ந்த முக்கியப் பிரச்சினைகள் குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 20: சென்னையை அடுத்த கோவலத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேற்றிரவு நேரில் சந்தித்துப் பேசினார். அதோடு, அமித் ஷா ஏற்பாடு செய்த இரவு விருந்தில் விஜய் கலந்துகொண்டார். மாநாட்டிற்கு முன்னதாக நடைபெற்ற இந்த இரவு விருந்தும், அதனைத் தொடர்ந்து அமித் ஷா – விஜய் இடையே நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்பும் தேசிய மற்றும் மாநில அரசியல் களம் முழுவதும் பெரும் பரபரப்பையும் கூர்ந்து கவனிக்கும் சூழலையும் உருவாக்கியுள்ளது. ஏனெனில், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முதல்வர் விஜய் சந்திப்பது இதுவே முதன்முறை என்பதே, இதற்கு முக்கிய காரணமாகும்.
மேலும் படிக்க: மும்முனை போட்டிக்கு நடுவே புது கணக்கு.. தமிழக இடைத்தேர்தலில் உருவாகும் புதிய கூட்டணி? ஒரணியில் கரம் கோர்க்கும் முக்கிய தலைவர்கள்!
அமித்ஷாவை வரவேற்ற முதல்வர் விஜய்:
Met Chief Minister of Tamil Nadu Thiru C. Joseph Vijay in Chennai, ahead of the 31st Meeting of the Southern Zonal Council, to be held tomorrow in Kovalam, Chengalpattu.
செங்கல்பட்டு, கோவளத்தில் நாளை நடைபெறவிருக்கும் தெற்கு மண்டல கவுன்சிலின் 31வது கூட்டத்திற்கு முன்னதாக, தமிழக… pic.twitter.com/VumDaLR7Bz
— Amit Shah (@AmitShah) August 19, 2026
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 31-வது தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு சென்னை கோவலத்தில் இன்று (ஆக.20) நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகத் தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த அமித் ஷா, சாலை மார்க்கமாகக் கோவலத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு வருகை தந்தார். அவரைத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் முறைப்படி வரவேற்பதற்காக, தலைமைச் செயலாளர் சாய்குமார் உள்ளிட்ட உயராதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் முன்னதாகவே அங்கு சென்று காத்திருந்து தமிழ்நாடு அரசு சார்பில், பொன்னாடை போர்த்தி உற்சாகமாக வரவேற்றார்.
தென்மாநில முதல்வர்கள் மாநாடு:
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆந்திர மாநில முதலமைச்சர் நாரா சந்திரபாபு நாயுடு, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் உள்ளிட்டோரும் சென்னை வருகை தந்துள்ளனர். இவர்களுடன் அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட்டில் தென்மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி, புதிய தொழில் முதலீடுகள், கூட்டுறவுத் துறை வளர்ச்சி மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்வளப் பகிர்வு உள்ளிட்ட முக்கியக் கட்டமைப்பு விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
மேலும் படிக்க: மகளிர் சுய உதவிக் குழுவுக்கு பிரத்யேக மின்னணு வணிக தளம்.. பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!
அரை மணி நேரத்திற்கு மேலாக நடந்த சந்திப்பு:
இதனிடையே, அமித் ஷா – விஜய் இடையிலான தனிப்பட்ட சந்திப்பும், அதைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்தும் அரசியல் தளத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இதையொட்டி, சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், நிலுவையில் உள்ள மத்திய அரசின் நிதிகள் மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பை நிறைவு செய்து கொண்டு முதலமைச்சர் விஜய் ஈச்சங்காட்டில் உள்ள தனது இல்லத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.