நடுரோட்டில் நடந்த பயங்கரம்.. பெண் பைக் ரைடரை விரட்டிச் சென்று மோதிய கார்.. பதற வைக்கும் வீடியோ!!
Gurugram Road Rage: குருகிராமின் கோல்ஃப் கோர்ஸ் சாலையில் பெண் பைக் சவாரி செய்யும் சியா என்பவரை, கார் ஓட்டுநர் தொடர்ந்து விரட்டிச் சென்று மோதிவிட்டுத் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பைக்கிலிருந்து விழுந்து இழுத்துச் செல்லப்பட்ட இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, குருகிராம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவின் முக்கிய நகர்ப்புறப் பகுதிகளில் சாலைப் பாதுகாப்பும், வாகன ஓட்டிகளின் வரம்புமீறிய ‘ரோடு ரேஜ்’ சம்பவங்களும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகின்றன. குறிப்பாக, இரவு மற்றும் காலை வேளைகளில் அதிவேகமாகவும் அத்துமீறியும் வாகனங்களை ஓட்டும் நபர்களால் மற்ற வாகன ஓட்டிகள், முக்கியமாகப் பெண் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். அந்த வகையில், ஹரியானா மாநிலம் குருகிராமில் அதிநவீன ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்று கொண்டிருந்த பெண் பைக் ரைடர் ஒருவரை, ஒரு சொகுசு கார் தொடர்ந்து விரட்டிச் சென்று வேண்டுமென்றே மோதி தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க : Viral Video : சாட்ஜிபிடியை உண்மையான பெண் என நினைத்து பேசிய மூதாட்டி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
காரில் வந்த நபர்களின் அத்துமீறலும் விபத்தும்:
சம்பவத்தன்று காலை குருகிராமின் முக்கியச் சாலையான கோல்ஃப் கோர்ஸ் பகுதியில், ‘சியா’ என்ற பெண் தனது நண்பர்களுடன் ‘Aprilia RS 457’ ரக ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, பின்னால் வந்த வெள்ளை நிற செடான் காரில் இருந்த நபர்கள், இவரைத் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்து இடைஞ்சல் கொடுத்துள்ளனர். கார் ஓட்டுநரிடம் தள்ளிச் செல்லுமாறு சியா கூறிய போதிலும், காரில் இருந்தவர்கள் அநாகரிகமாகச் சைகைகள் செய்து அவரை நிதானம் இழக்க வைக்கும் வகையில் பைக்கை நிறுத்தச் சொல்லி அச்சுறுத்தியுள்ளனர். சியாவின் நண்பர் அந்தச் சொகுசு காரை வழிமறிக்க முயன்றும், காரில் இருந்தவர்கள் காரை வேகமாகச் செலுத்திச் சியாவின் பைக் மீது பலமாக மோதினர்.
வைரலான வீடியோவும் அதிர்ச்சித் தகவலும்:
View this post on Instagram
மோதிய வேகத்தில் சியா பைக்கோடு கீழே விழுந்து சாலையில் பல அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். காரில் இருந்தவர்கள் விபத்தை ஏற்படுத்திய உடனேயே நிற்காமல் அதிவேகமாகத் தப்பிச் சென்றுவிட்டனர். இந்த பயங்கர விபத்து, சியாவின் ஹெல்மெட் மற்றும் அவரது நண்பர்களின் பைக்கில் பொருத்தப்பட்டிருந்த ஆக்ஷன் கேமராக்களில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவைச் சியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, “காரில் இருந்த நபர்கள் மதுபோதையில் இருந்ததாகத் தெரிகிறது. குருகிராம் சாலைகளில் பயணம் செய்யவே இன்று பயமாக இருக்கிறது” எனத் தனது ஆதங்கத்தைப் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிக்க: குட்டி நாயை தாக்காமல் விட்ட சிறுத்தை.. அந்த மனசு தான் கடவுள்.. இணையத்தை கவர்ந்த வீடியோ!
காவல்துறை விசாரணை மற்றும் நடவடிக்கை:
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, டெல்லி மற்றும் குருகிராம் காவல் துறைக்கு இணையவாசிகள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, குருகிராம் காவல்துறை இச்சம்பவம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது குறித்துப் பேசிய காவல்துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி சந்தீப் துரன், சம்பவ இடத்தின் துல்லியமான பகுதியைக் கண்டறிந்து வருவதாகவும், கார் எண்ணை வைத்து ஓட்டுநரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து எழுத்துப்பூர்வமான புகாரைப் பெற்று, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் உறுதியளித்துள்ளனர்.