பட்ஜெட்டிற்குள் காரை தேடுகிறீர்களா? ரூ.5 லட்சத்திற்குள் இந்தியாவில் சிறந்த 5 கார்கள்
Best Budget Cars : இந்தியாவில் கார் என்பது ஆடம்பரம் என்பதைத் தாண்டி தற்போது அத்தியாவசியமான ஒன்றாக மாறியிருக்கிறது. இந்த நிலையில் கார் வாங்க நினைப்பவர்களுக்கு பட்ஜெட் ஒரு தடையாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் சிறந்த கார்களை பார்க்கலாம்.
இந்தியாவில் கார் என்பது ஆடம்பரம் என்ற நிலையைத் தாண்டி அது தற்போது அத்தியாவசிய ஒன்றாக மாறியிருக்கிறது. குறிப்பாக குடும்பமாக வெளியே செல்ல கார் மிகவும் அவசியமானதாக மாறியிருக்கிறது. ஆனால் கார்களின் விலை காரணமாக எளிய மக்கள் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் ரூ. 5 லட்சம் பட்ஜெட்டில், இந்தியாவில் பல சிறந்த என்ட்ரி லெவல் கார்கள் கிடைக்கின்றன. மாருதி சுசூகி எஸ் பிரஸ்ஸோ, ஆல்டோ கே10, ரெணாடல் கிவிட், டாடா டியாகோ, மாருதி சுசுகி செலிரியோ போன்ற குறைந்த விலையில் கிடைக்கின்றன.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு, கார் வாங்கும் போது அதன் பட்ஜெட் மிக முக்கியமான காரணமாகும். ஒரு வாகனம் வாங்குவது என்பது லட்சங்களில் பணம் தேவைப்படும் என்பதால் கார் வாங்காமலேயே தவிர்க்கிறார்கள். மக்கள் இயல்பாகவே குறைந்த விலையில் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், எரிபொருள் சிக்கனம், சிறப்பம்சங்கள் ஆகியவற்றிலும் சிறந்த செயல்திறனை வழங்கும் காரையே தேடுகிறார்கள்.
இதையும் படிக்க : ஒரே சார்ஜில் 212 கி.மீ பயணிக்கலாம் – இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்




இக்காரணத்தினாலேயே, கார் தயாரிப்பாளர்கள் குறைந்த விலையிலேயே சிறந்த செயல்திறன் மற்றும் வசதிகளை வழங்கும் கார்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றனர். உங்கள் பட்ஜெட் ரூ. 5 லட்சத்திற்குள் இருந்தால், கவலைப்படத் தேவையில்லை. இந்த விலை வரம்பில், விலை, மைலேஜ் மற்றும் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த தேர்வுகளாக அமையும் பல உயர்தர என்ட்ரி லெவல் கார்கள் உள்ளன.
மாருதி சுசூகி எஸ்-பிரஸ்ஸோ
இந்தியாவில் ரூ. 5 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் மிகவும் மலிவான கார்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது Maruti Suzuki S-Presso. இது தற்போது இந்தியாவில் விற்பனையாகும் மிகவும் பட்ஜெட் கார்களில் ஒன்றாகும். இது K10C 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயங்குகிறது. இந்த இன்ஜின் 63 bhp சக்தியையும் 89 Nm டார்க்கையும் வழங்குகிறது, மேலும் இது 5 ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 3.49 லட்சத்தில் தொடங்குகிறது. வாங்குபவர்களுக்கு தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி வகையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் உள்ளது, இது நகர்ப்புறப் பயணங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
மாருதி ஆல்டோ கே10
மற்றொரு சிறந்த மற்றும் குறைத்த விலை கார்களில் மாருதி சுசூகி ஆல்டோ கே10. இது எஸ்-பிரெஸ்ஸோ காரைப் போலவே, இதுவும் K10C 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளது; இந்த இன்ஜின் 63 bhp சக்தியையும் 89 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது, மேலும் இது 5 ஸ்பீட் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆல்டோ கே 10 காரின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 3.69 லட்சம் ஆகும், இது CNG இன்ஜின் விருப்பத்துடனும் கிடைக்கிறது.
ரெனால்ட் கிவிட்
எஸ்யூவி போன்ற வடிவமைப்பு மற்றும் ரூ. 5 லட்சத்திற்கும் குறைவான மலிவு விலை காரணமாக, ரெனால்ட் கிவிட் முதன்முறையாக கார் வாங்குபவர்களிடையே ஒரு பிரபலமான தேர்வாகத் தொடர்ந்து திகழ்கிறது. இது 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது; இது 67 bhp பவரையும் 91 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இது 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் 5 ஸ்பீட் AMT ஆகிய இரண்டு டிரான்ஸ்மிஷன் விருப்பங்களையும் வழங்குகிறது. இந்த ஹேட்ச்பேக் காரின் விலை எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 4.29 லட்சத்தில் தொடங்குகிறது.
இதையும் படிக்க : புதிய தோற்றத்துடன் அறிமுகமாகும் பஜாஜ் பல்சர் 180 பைக் – அப்படி என்ன ஸ்பெஷல்?
டாடா டியாகோ
பட்ஜெட்டிற்குள் ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் அனுபவத்தை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு, டாடா டியாகோ ஒரு கவர்ச்சிகரமான தேர்வாகத் திகழ்கிறது. இது 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயங்குகிறது. இது 84 bhp பவரையும் 113 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இந்த டியாகோ காரானது 5 ஸ்பீட் மேனுவல் அல்லது 5 ஸ்பீட் AMT கியர்பாக்ஸ் ஆகிய விருப்பங்களுடன் கிடைக்கிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 4.59 லட்சம் ஆகும். மேலும் டாடா நிறுவனம் இதை சிஎன்ஜி ஆப்ஷனுடனும் வழங்குகிறது.
மாருதி சுசூகி செலிரியோ
இந்தப் பட்டியலில் இடம்பெறும் கடைசி கார் மாருதி சுசூகி செலிரியோ. இதுவும் ரூ. 5 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் மற்றொரு காராகும். இது சிறந்த எரிபொருள் சிக்கனத்திற்குப் பெயர் பெற்ற ஒரு ஹேட்ச்பேக் காராகும். இது K10 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இது 67.5 bhp பவரையும் 91.1 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இதில் 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டு டிரான்ஸ்மிஷன் விருப்பங்களும் கிடைக்கின்றன. செலிரியோ காரின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 4.69 லட்சம் ஆகும். மேலும் இதன் சிஎன்ஜி ஆப்சனும் கிடைக்கிறது.