ஓலாவின் இந்த எலக்ட்ரிக் பைக்கிற்கு ரூ.60,000 தள்ளுபடி – வெளியான அதிரடி அறிவிப்பு
Ola Roadster Price Cut Deal : ஒலா எலக்ட்ரிக் நிறுவனம் அந்த நிறுவனத்தின் ரோட்ஸ்டர் எக்ஸ் பிளஸ் பைக்கின் விலையில் ரூ.60,000 வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. அதற்கான காரணம் மற்றும் இந்த பைக்குகளின் தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளிட்டவை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் எதிர்காலமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக அன்றாட பயன்பாடுகளுக்கு எலக்ட்ரிக் வாகனங்கள் சிறந்ததாக மக்கள் கருதுகின்றனர். காரணம் சமீப காலமாக எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பலரும் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் திட்டத்தில் இருக்கின்றனர். அந்த வகையில் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னணி நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது பிரபல எலக்ட்ரிக் பைக்கான ரோட்ஸ்டர் எக்ஸ் பிளஸ் 9.1 kwh மாடலின் விலையை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1,89,999ல் இருந்து ரூ. 1, 29,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ரூ. 60,000 குறைவு என்பதால் மக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
ஓலாவின் இந்த எலக்ட்ரிக் பைக்கிற்கு ரூ.60,000 தள்ளுபடி
இந்த விலை குறைப்பு மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஓலா நிறுவனத்தின் சொந்தமாக 4680 பாரத் செல் என்ற பேட்டரி தயாரிப்பை செய்து வருகிறது. இந்த நிலையில் பேட்டரி உற்பத்தி தற்போது அதிகரித்துள்ளதன் காரணமாக, உற்பத்தி செலவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக ஓலா நிறுவனம் இந்த அதிரடி விலை குறைப்பை அறிவித்துள்ளது.
இதையும் படிக்க : புதிய தோற்றத்துடன் அறிமுகமாகும் பஜாஜ் பல்சர் 180 பைக் – அப்படி என்ன ஸ்பெஷல்?




ஆனால் இந்த விலை குறைப்புக்கு பின்னால் சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இந்த பைக் தொடர்ந்து விற்பனை செய்யப்படாது. அதற்கு பதிலாக குறிப்பிட்ட நாட்கள் மற்றும் குறிப்பிட்ட நேரங்களில் விற்பனை செய்யும் வகையில் லிமிட்டட் விண்டோ முறையை ஓலா நிறுவனம் அதிகரித்துள்ளது. இதன் படி முதல் லிமிட்டட் விண்டோ முறை முதலில் ஏப்ரல் 3, 2026 மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரோட்ஸ்டர் எக்ஸ் பிளஸ் மாடல் ஒரே சார்ஜில் அதிகபட்சமாக 500 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தற்போது ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின்உயர்ந்த செயல்திறன் கொண்ட மாடலாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பைக்கின் தொழில்நுட்ப அம்சங்களை பொறுத்தவரை 0 முதல் 40 கி.மீ வேகத்தை வெறும் 2.7 விநாடிகளில் எட்டும் திறன் கொண்டது. இந்த பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 12 கி.மீ என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 1000 வாட்ஸ் போர்டபிள் சார்ஜரை பயன்படுத்தி 0 முதல் 80 சதவிகிதம் வரை 8.5 மணி நேரத்தில் சார்ஜ் செய்ய முடியும்.
இதையும் படிக்க : ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ வரை பயணிக்கலாம் – இந்தியாவின் 5 சிறந்த எலக்ட்ரிக் பைக்குகள் இதோ
மேலும் இந்த பைக் ஸ்போர்ட், நார்மல், எக்கோ என்ற 3 ரைடிங் மோடுகள், 4.3 இஞ்ச் கலர் எல்சிடி டிஸ்பிளே, புளூடுத், மற்றும் வைஃபை கனெக்டிவிட்டி, ஓடிஏ அப்டேட்ஸ், குரூஸ் கண்ட்ரோல், ரிவர்ஸ் மோட் போன்ற பல ஸ்மார்ட் அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அம்சமாக இதன் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் டிஸ்க் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியும் உள்ளது.
இதற்கிடையில், மார்ச் மாதத்தில் ஓலா எலக்ட்ரிக் பைக் விற்பனையில் 150 சதவிகிதம் வரை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடைசி வாரத்தில் தினசரி 1000க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் கிடைத்ததாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மொத்தத்தில், விலை குறைப்புடன் கூடிய இந்த புதிய விற்பனை முறை, மின்சார வாகன சந்தையில் போட்டியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.