உயர்ந்த ஓலா, ஊபர் கட்டணம்.. புதிய விதிகள் அமல்.. இவ்வளவா?
Ola Uber Fare Hike : ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் பீக் ஹவரில் 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, பல்வேறு புதிய விதிகளை மத்திய அரசு விதித்துள்ளது. குறிப்பாக, காரணமின்றி ஒரு பயணம் ரத்து செய்யப்பட்டால், ஓட்டுநருக்கும் பயணிக்கும் தலா ரூ.100 மிகாமல் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, ஜூன் 02 : ஓலா, ஊபர் போன்ற டாக்ஸி நிறுவனங்களின் கட்டணத்தை இரண்டு மடங்கு வரை உயர்த்தி (Ola Uber Fare Hike) வசூலிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், தனிநபர் இருசக்கர வாகனங்களை பைக் டாக்ஸியாக பயன்படுத்தவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் பெங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் ஓலா, ஊபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. ஓலா, ஊபர் செயலிகளில் பைக், கார், ஆட்டோ போன்றவற்றை மக்கள் புக் செய்து பயணித்து வருகின்றனர். டாக்ஸி நிறுவனங்கள் கிலோ மீட்டருக்கு ஏற்ற வகையில் கட்டணத்தை வசூலித்து வருகிறது. அதோடு, பீக் ஹவரில் அதிக கட்டணமும், தேவை குறைவான நேரங்களில் குறைவான கட்டணத் டாக்ஸி நிறுவனங்கள் வசூலித்து வருகின்றன.
உயர்ந்த ஓலா, ஊபர் கட்டணம்
ஆனால், கடந்த சில மாதங்களாக ஓலா, ஊபரில் கட்டணங்கள் குறைவாக வசூலிப்பதாகவும், தங்களுக்கு போதுமான வசூல் கிடைக்கவில்லை என ஓலா, ஊபர் ஊழியர்கள் கூறி வருவதாக தெரிகிறது. இப்படியான சூழலில், மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஓலா, ஊபர் போன்ற டாக்ஸி நிறுவனங்களின் கட்டணத்தை இரண்டு மடங்கு வரை உயர்த்தி வசூலிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக, இது 1.5 மடங்காக இருந்த நிலையில, அதை 2 மடங்காக உயர்த்தி மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. திருத்தப்பட்ட விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றுடன் கூடுதலாக விதிகளையும் சேர்க்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் மூன்று மாதங்களுக்கு மாநில அரசுகள் இதனை ஏற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட காரணமின்றி ஒரு சவாரி ரத்து செய்யப்பட்டால், ரூ.100க்கு மிகாமல் கட்டணத்தில் 10 சதவீதம் ஓட்டுநர் மீது விதிக்கப்படும்.
புதிய விதிகள் அமல்
இதே விதிமுறை தான் பயணிகளுக்கும் பொருந்தும். பயன்பாடு இல்லாத நேரங்களில் குறைந்தபட்சமாக அடிப்படையில் 50 சதவீதம் கட்டணம் வசூலிக்கலாம். பயணிகள் இல்லாமல் பயணித்த தூரம், பயணித்த தூரம் மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் எரிபொருள் உள்ளிட்டவற்றை ஈடு செய்யும் வகையில் மூன்று கிலோ மீட்டருக்கு அடிப்படை கட்டணம் வசூலிக்கப்படும்.
அடிப்படை கட்டணத்தை விட குறைந்தபட்சமாக 50 சதவிதமும், அதிகபட்சமாக இரண்டு மடங்கு வரையும் கட்டணத்தை நிறுவனங்கள் வசூலிக்கலாம். பயண தூரம் மூன்று கிலோமீட்டருக்கும் குறைவாக இருந்தால் தவிர, பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படாது. பயணிகள் புறப்படும் இடத்திலிருந்து பயணி இறக்கிவிடப்படும் இடத்திற்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். பயணிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் காப்பீட்டை ஒருங்கிணைப்பாளர் உறுதி செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.