திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை.. கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி மிரட்டல்.. தென்காசியில் மாணவர் உள்பட இருவர் கைது!
Tenkasi Student Arrested : தென்காசி மாவட்டத்தில் தன்னுடன் படித்த கல்லூரி மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கி ஏமாற்றி கொலை மிரட்டல் விடுத்த மாணவரையும், அவருக்கு உடந்தையாக இருந்த அண்ணனையும் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே அமைந்துள்ளது கீழப்பாவூர் கிராமம். இந்த கிராமத்தில் யூனியன் ஆபீஸ் சாலையில் ராஜேஸ்வரி நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் வசித்து வருபவர் வெற்றி கருப்பன். இவரது மகன் சஞ்சய் ( 21 வயது). இவர், அந்த பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். அத்துடன், இதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரும் அதே கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். இதனால், மாணவன் சஞ்சய்க்கும், அந்த இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்துள்ளனர். அது ஒரு கட்டத்தில் காதலாக மாறிய நிலையில், இருவரும் அவ்வப்போது வெளியிடங்களுக்கு செல்வதுமாக இருந்து வந்தனர்.
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம்
இந்த நிலையில், அந்த இளம் பெண்ணிடம் அதிக அளவு நெருங்கி பழகிய மாணவன் சஞ்சய், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இந்த பழக்கம் வெகு நாட்களாக இருந்த நிலையில், அந்த மாணவி திடீரென கர்ப்பமானார். இது தொடர்பாக மாணவன் சஞ்சயிடம் அந்த மாணவி தெரிவித்த நிலையில், கர்ப்பத்தை கலைக்குமாறும், அவ்வாறு கலைத்தால் தான் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்று சஞ்சய் கூறியதாக தெரிகிறது.
மேலும் படிக்க: பட்டா மாற்றத்துக்கு ரூ.1.5 லட்சம் லஞ்சம்.. நீலகிரியில் பெண் விஏஓ அதிரடி கைது.. லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடவடிக்கை!




கர்ப்பத்தை கலைக்க கூறி கொலை மிரட்டல்
இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கர்ப்பத்தை கலைக்க மறுத்ததாக கூறப்படுகிறது. அத்துடன், தன்னை திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழலாம் என்று அந்த மாணவி வலியுறுத்தி உள்ளார். ஆனால், அதனை ஏற்க மறுத்த மாணவன் சஞ்சய் அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் இது தொடர்பாக தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் அறிவுறுத்தலின் அடிப்படையில், இது தொடர்பாக ஆலங்குளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மாணவன் உள்பட இருவர் கைது – ஒருவருக்கு வலை வீச்சு
அந்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவன் சஞ்சய், அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது அண்ணன் அரவிந்த் ( 25 வயது), சித்தப்பா சேர்மன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், மாணவன் சஞ்சய், அவரது அண்ணன் அரவிந்த் ஆகிய இருவரை போலீசார் கைது செய்த நிலையில் தலைமறைவான சேர்மனை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: இலங்கைக்கு கடத்தல் முயற்சி! 1.9 கோடி ஹஷிஷ் பறிமுதல்.. கஞ்சாவை விட பல மடங்கு சர்வதேச மதிப்பு.. ராமநாதபுரத்தில் போலீசார் அதிரடி!