ரூ.2,000-க்கு மேலான UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்.. விரைவில் வருகிறது MDR கட்டண முறை!
Payment Above 2000 Rupees Will Get MDR Charges | பெரும்பாலான பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக அதிக அளவில் யுபிஐ பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்பட உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பெரும்பாலான இந்திய மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பிரதான பண பரிவர்த்தனை முறையாக யுபிஐ (UPI – Unified Payment Interface) மாறிவிட்டது. பெட்டிக் கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை அனைத்து இடங்களிலும் பலரும் யுபிஐ பயன்படுத்தி தான் பண பரிவர்த்தனை மேற்கொள்கின்றனர். யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ள எந்தவித கட்டணமும் இல்லை என்பதால், பொதுமக்கள் அதனை தாராளமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு விரைவில் கட்டணம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், எந்த எந்த பரிவர்த்தனைகளுக்கு இந்த கட்டணம் பொருந்தும், எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்கலாம்.
ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்
யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் ரூ.2,000-க்கு மேலான கட்டணங்களுக்கு எம்டிஆர் (MDR – Merchant Discount Rate) கட்டணம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த கட்டண முறையை விரைவில் அறிமுகம் செய்ய இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் திட்டமிட்டுள்ள நிலையில், அடுத்த இரண்டு வாரங்களில் இந்த கட்டண முறை அமலுக்கு வருவது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : கேஒய்சி மோசடி.. ஏமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?.. ஆர்பிஐ அறிவுரை!
சாதாரண பொதுமக்களுக்கு எந்தவித பாதுப்பும் இல்லை
இந்த கட்டண முறை அறிமுகம் செய்யப்பட்டாலும் அது சாதாரண பொதுமக்களுக்கு எந்தவித சிக்கலையும் ஏற்படுத்தாது. காரணம், இந்த கட்டண முறை முற்றிலும் பெரிய வணிக வளாகங்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்றபடி, தனிநபர்கள் மேற்கொள்ளும் தினசரி பண பரிவர்த்தனைகள், குறைந்த அளவிலான பண பரிவர்த்தனைகள் இலவசமாகவே தொடரும். பெரிய வணிக வளாகங்களில் ரூ2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு நிறுவனங்களிடம் இருந்தே கட்டணம் வசூல் செய்யப்படும்.
இதையும் படிங்க : ஸ்மார்ட்போன் ஸ்பீக்கரை சுத்தம் செய்வது எப்படி?.. முக்கிய டிப்ஸ்கள் இதோ!
இந்த நிலையில், வணிகர்கள் எம்டிஆர் கட்டணத்தை வசூல் செய்ய விலையை உயர்த்தும் வாய்ப்பு உருவாகியுள்ளதாக பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்தது. இது குறித்து மக்களவையில் விளக்கம் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வணிகர்கள் தங்களுக்கு விதிக்கப்படும் எம்டிஆர் கட்டணத்தை நுகர்வோர் மீது திணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


