‘சிவா – தி ஆதியோகி’: கிராஃபிக் இந்தியாவுடன் சத்குரு இணைந்து அனிமேஷன் திரைப்படம்
புனிதமான ஷ்ராவண் மாதத்தில் ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு, சிவ பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார். உலக மக்கள் முதல் யோகியாகவும், யோகத்தின் மூல ஆதாரமாகவும் கருதும் ஆதியோகியின் வரலாறு விரைவில் அனிமேஷன் திரைப்படமாக பார்வையாளர்களுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இந்தப் படத்தை உருவாக்குவதற்காக கிராஃபிக் இந்தியா ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 24, 2026: இந்த ஷ்ராவண் மாதத்தில், பிரபல அனிமேஷன் தொடரான தி லெஜண்ட் ஆஃப் ஹனுமான் திரைப்படத்தை உருவாக்கிய கிராஃபிக் இந்தியா நிறுவனத்துடன் சத்குரு முக்கியமான கூட்டணியை அறிவித்துள்ளார். இதன் மூலம் யோக மரபில் முதல் யோகியாகவும், யோகத்தின் மூலமாகவும் கருதப்படும் ஆதியோகி சிவனை மையமாகக் கொண்டு பிரம்மாண்ட அனிமேஷன் திரைப்படம் உருவாகிறது.
ஆதியோகியை கொண்டாடும் அனிமேஷன் திரைப்படம்:
சத்குரு விவரித்துள்ள யோக மரபுக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படம், யோகத்தின் தோற்றம் மற்றும் ஆதியோகியாக சிவனின் கதையை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அனிமேஷன் மற்றும் சினிமாத்தனமான கதைசொல்லல் மூலம் எடுத்துரைக்கிறது. கிராஃபிக் இந்தியாவின் இணை நிறுவனரான ஷரத் தேவ்ராஜன் இப்படத்தின் தயாரிப்பாளர், இணை உருவாக்குநர் மற்றும் எழுத்தாளராகப் பணியாற்றுகிறார்.
2027ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் படம்:
உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது. 2027ஆம் ஆண்டு இப்படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவனைப் பற்றிய யோக மரபின் புரிதல் குறித்து சத்குரு கூறுகையில், “யோக கலாச்சாரத்தில் சிவன் கடவுளாகக் கருதப்படுவதில்லை. எங்களைப் பொறுத்தவரை சிவன் ஆதியோகி, அதாவது முதல் யோகி; ஆதிகுரு, அதாவது முதல் குரு. மனித வரலாற்றில் முதன்முறையாக, இயற்கையின் எளிய விதிகள் நிரந்தரமான தடைகள் அல்ல என்ற கருத்தை ஆதியோகி சிவன் அறிமுகப்படுத்தினார். ஒருவர் முயற்சி செய்யத் தயாராக இருந்தால், அனைத்து வரம்புகளையும் கடந்து முக்தியை அடைய முடியும்” என்றார்.
மேலும், உடலியல் இயற்கையின் விதிகளைத் தாண்டிச் செல்வது ஆன்மிகப் பயணம் என்றும், அந்த வகையில் தாங்கள் விதிகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும், சிவனே அதன் உச்ச வடிவம் என்றும் சத்குரு தெரிவித்துள்ளார்.
ஷரத் தேவ்ராஜன் இந்திய அனிமேஷன் மற்றும் கதாபாத்திர பொழுதுபோக்குத் துறையில் முன்னணி படைப்பாளராகவும், விருது பெற்ற படைப்பாளராகவும் உள்ளார். தி லெஜண்ட் ஆஃப் ஹனுமான் தொடரின் இணை உருவாக்குநரான இவர், பாகுபலி: தி லாஸ்ட் லெஜெண்ட்ஸ் மற்றும் பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட் ஆகிய அனிமேஷன் தொடர்களின் எழுத்தாளர் மற்றும் இணை உருவாக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், மார்வெலுக்காக உருவாக்கப்பட்ட இந்திய ஸ்பைடர் மேன் கதாபாத்திரமான பவித்ர பிரபாகரின் இணை உருவாக்குநராகவும் ஷரத் தேவ்ராஜன் உள்ளார். இந்தக் கதாபாத்திரம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் திரைப்படத்திலும் இடம்பெற்றது.
அதிநவீன அனிமேஷன் தொழில்நுட்பத்தின் மூலம் ஆதியோகியின் கதையை உலகளவில் பிரம்மாண்டமான திரைப்பட அனுபவமாக ரசிகர்களுக்கு வழங்க இப்படம் உருவாகிறது. இந்தியாவின் ஆன்மிக மற்றும் யோக மரபின் ஆழமான அம்சங்களை பல்வேறு தலைமுறையினர் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த பார்வையாளர்களுக்கும் புரியும் வகையில் இப்படம் உருவாக்கப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
கிராஃபிக் இந்தியாவின் விருது பெற்ற அனிமேஷன் ஸ்டுடியோ இப்படத்தின் தயாரிப்புப் பணிகளை முன்னெடுத்து வருகிறது. தற்போது தயாரிப்புக்கு முந்தைய கட்டத்தில் உள்ள இப்படம், 2027ஆம் ஆண்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.a