இந்தியாவில் சமூக ஊடகங்களில் போலி கணக்குகள் மூலம் செயல்படும் சைபர் குற்றங்களை தடுக்க மத்திய அரசு முக்கிய திட்டம் ஒன்றை செயல்படுத்தவுள்ளது. அதன் படி, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்நாப்சாட், மற்றும் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் கேமிங் மற்றும் டேட்டிங் செயலிகளிலும் KYC சரிபார்ப்பை கட்டாயமாக்குவது தொடர்பான திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
சமூக வலைதளங்களில் நடைமுறைக்கு வரும் KYC சரிபார்ப்பு முறை
இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், இனி சமூக வலைதளங்களில் புதிய கணக்கு துவங்கும் நபர்கள் தங்களது அடையாளத்தை உறுதி செய்யும் வகையில் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். இது வங்கிகள் மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் KYC முறையைப் போன்றதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் போலி கணக்குகளை உருவாக்குவது குறையும் என்றும், இதனால் சமூக வலைதளங்கள் மூலம் நடைபெறும் சைபர் குற்றங்கள் வெகுவாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சமீப காலமாக சமூக லைதளங்களில் போலி கணக்குகள் உருவாக்கி மோசடி, ஆன்லைன் ஸ்டாக்கிங், தனிப்பட்ட தகவல் திருட்டு, பெண்களுக்கு ஆன்லைன் மூலம் தொந்தரவு அளிப்பது, அனுமதி இல்லாமல் தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்வது, ஏஐ மூலம் தவறாக சித்தரிக்கப்பட்ட படங்களை பகிர்வது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காண்பது கடினமாக இருப்பதால், இந்த பிரச்னையை சரி செய்ய நாடாளுமன்ற குழு சில கடுமையான விதிகளை பரிந்துரைத்தது.
டேட்டிங் செயலிகளிலும் குற்றங்களை தடுக்க புதிய திட்டம்
இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் சமூக வலைதளங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதாகும். KYC சரிபார்ப்பு முறை நடைமுறைக்கு வந்தால் ஒருவரின் அடையாளம் உறுதி செய்யப்பட்ட பிறகே சமூக வலைதளங்களில் கணக்கு துவங்க அனுமதி வழங்கப்படும். இதன் மூலம் குற்றச்செயல்களில் ஈடுபடுவபர்களை உடனடியாக அடையாளம் காணமுடியும். இதனால் தவறான செயல்கள் குறையும். மேலும் டேட்டிங் மற்றும் கேமிங் செயல்களிலும் மோசடிகளை தடுக்க இந்த திட்டம் உதவும்.
இதையும் படிக்க : இனி இன்ஸ்டாகிராமில் End-to-end Encryption அம்சம் இருக்காது.. கேள்விக்குறியாகும் பாதுகாப்பு?
இந்த திட்டம் வந்தால் போலி கணக்குகள் மூலம் நடைபெறும் ஆன்லைன் மோசடிகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றவாளிகளை விரைவாக கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்க இந்த திட்டம் ஏதுவாக இருக்கும். மேலும் சமூக வலைதளங்கள் நம்பகத்தன்மையுடையதாகவும், பாதுகாப்பானதாகவும் மாறும் என கூறப்படுகிறது.