AI ஆதிக்கம்.. மெட்டா நிறுவனம் 20% ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டம்.. அதிர்ச்சி தகவல்!!
Meta Plans To Layoff: 2028-ம் ஆண்டிற்குள் தரவு மையங்களை (Data Centers) உருவாக்க 600 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது. இந்த வார தொடக்கத்தில், ஏஐ ஏஜெண்டுகளுக்காக உருவாக்கப்பட்ட 'மோல்ட்புக்' (Moltbook) என்ற சமூக வலைதள தளத்தை மெட்டா வாங்கியது.
மெட்டா நிறுவனம் அதன் செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்புக்கான செலவுகளைச் சமாளிக்கவும், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணியாளர்களின் செயல்திறனை அதிகரிக்கவும் தனது நிறுவனத்தில் சுமார் 20 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பணிநீக்கத்திற்கான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. அதேபோல், எத்தனை பேர் நீக்கம் செய்யப்பட உள்ளனர் என்பது இறுதி செய்யப்படவில்லை என்று இந்த விவகாரம் அறிந்த நபர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: WhatsApp : இனி வாட்ஸ்அப்பில் 19 மொழிகளில் மொழிப்பெயர்க்கலாம்.. வந்தாச்சு Instant Translation அம்சம்!
நிறுவனத்தைச் சுருக்க திட்டம்:
மெட்டாவின் உயர்மட்ட நிர்வாகிகள் சமீபத்தில் இது குறித்த திட்டங்களை மற்ற மூத்த தலைவர்களிடம் பகிர்ந்துள்ளனர். நிறுவனத்தைச் சுருக்குவது குறித்த திட்டமிடலைத் தொடங்குமாறு அவர்களிடம் அறிவுறுத்தியதாக அந்த நபர்கள் கூறினர். இது குறித்து மெட்டா நிறுவனம் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. 20 சதவீத பணிநீக்கம் உறுதி செய்யப்பட்டால், 2022-ன் இறுதியில் மற்றும் 2023-ல் மேற்கொள்ளப்பட்ட “செயல்திறன் மிக்க ஆண்டு” (year of efficiency) மறுசீரமைப்புக்குப் பிறகு, மெட்டா மேற்கொள்ளும் மிகப்பெரிய பணிநீக்கமாக இது அமையும். 2025 டிசம்பர் மாத நிலவரப்படி, மெட்டா நிறுவனம் சுமார் 79,000 ஊழியர்களைக் கொண்டிருந்தது. இதற்கு முன், நவம்பர் 2022-ல் 11,000 பணியாளர்களையும் (அக்கால பணியாளர்களில் சுமார் 13%), நான்கு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 10,000 பணியாளர்களையும் நிறுவனம் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
ஜுக்கர்பெர்க்கின் கவனம் ஜெனரேட்டிவ் AIல்:
கடந்த ஒரு ஆண்டாக, மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க், ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI) துறையில் மெட்டாவை வலுவாக நிலைநிறுத்த முயற்சி செய்து வருகிறார். சிறந்த ஏஐ ஆராய்ச்சியாளர்களை ஈர்ப்பதற்காக, புதிய சூப்பர் இன்டெலிஜென்ஸ் குழுவில் சேரும் ஆராய்ச்சியாளர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு பல நூறு மில்லியன் டாலர் மதிப்புள்ள ஊதியத் தொகுப்புகளை நிறுவனம் வழங்கியுள்ளது.
2028-ம் ஆண்டிற்குள் தரவு மையங்களை (Data Centers) உருவாக்க 600 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது. இந்த வார தொடக்கத்தில், ஏஐ ஏஜெண்டுகளுக்காக உருவாக்கப்பட்ட ‘மோல்ட்புக்’ (Moltbook) என்ற சமூக வலைதள தளத்தை மெட்டா வாங்கியது. மேலும், சீன ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘மானுஸ்’ (Manus) நிறுவனத்தை வாங்க குறைந்தபட்சம் 2 பில்லியன் டாலர்களை மெட்டா செலவிடுவதாகவும் கூறப்படுகிறது.
ஜனவரி மாதம் இது குறித்துப் பேசிய ஜுக்கர்பெர்க், ஏஐ முதலீடுகள் மூலம் செயல்திறன் மேம்பட்டு வருவதைக் குறிப்பிட்டு, “முன்பு பெரிய குழுக்கள் தேவைப்பட்ட திட்டங்களை, இப்போது ஒரு திறமையான நபரால் மட்டுமே செய்து முடிக்க முடிகிறது” என்று கூறியிருந்தார்.
தொழில்நுட்பத் துறையில் ஒரு போக்கு:
மெட்டாவின் இந்த நடவடிக்கை, இந்த ஆண்டு அமெரிக்காவின் பெரிய நிறுவனங்கள், குறிப்பாக தொழில்நுட்பத் துறையில் காணக்கூடிய ஒரு பரந்த மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது. ஏஐ அமைப்புகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், குறைந்த பணியாளர்களைக் கொண்டு அதிகப் பணிகளைச் செய்ய உதவும் என்று நிறுவனங்கள் நம்புகின்றன.
இதையும் படிங்க: லேப்டாப், கம்ப்யூட்டரில் வைரஸ் பாதிப்பு?.. கண்டுபிடித்து சரி செய்வது எப்படி?
ஜனவரி மாதம், அமேசான் நிறுவனம் தனது பணியாளர்களில் சுமார் 10 சதவீதமான 16,000 பேரை நீக்குவதாக உறுதிப்படுத்தியது. கடந்த மாதம், பிளாக் (Block) என்ற ஃபின்டெக் நிறுவனம் தனது பணியாளர்களில் பாதியை நீக்கியது. அந்நிறுவனத்தின் சிஇஓ ஜாக் டோர்சி, ஏஐ கருவிகள் மூலம் சிறிய குழுக்களைக் கொண்டு அதிக வேலைகளைச் செய்ய முடியும் என்பதை வெளிப்படையாகக் குறிப்பிட்டிருந்தார்.