மாநகராட்சி பள்ளிகளில் அரசியல் கட்சியினருக்கு அனுமதி இல்லை – சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் மேயர் பிரியா..
"மாநகராட்சிப் பள்ளிகளுக்கு சம்பந்தமில்லாத நபர்கள் உள்ளே சென்று மாணவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க அனுமதி இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கூட பள்ளித் தலைமை ஆசிரியரின் அனுமதி பெற்ற பிறகே இதுபோன்ற நிகழ்வுகளை நடத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
ஜூன் 24, 2026: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா, “தொடர் மின்வெட்டு காரணமாகவே திமுக ஆட்சியை இழந்துவிட்டதாக மக்கள் நினைக்கின்றனர். இது தற்காலிக தோல்விதான். மீண்டும் திமுக ஆட்சி அமையும்” எனத் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி சார்பில் பல மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், முன்னாள் முதலமைச்சர்களின் புகைப்படங்களை அகற்ற வேண்டும் என்ற எந்த சட்ட விதியும் இல்லை என விளக்கம் அளித்தார்.
நேரமில்லா நேரத்தில் பேசிய 143-வது வார்டு திமுக கவுன்சிலரும், 11-வது மண்டலக் குழுத் தலைவருமான ராஜன், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படங்கள் பல இடங்களில் அகற்றப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.
முன்னாள் முதல்வரின் புகைப்படங்கள் நீக்க முயற்சிப்பது தவறு:
இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, “தமிழக அரசு நிறுவனங்களில் தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்கள் மக்கள் தொடர்புத் துறை (PRO) மூலம் வைக்கப்பட்டுள்ளன. கடந்த திமுக ஆட்சியின்போது அம்மா உணவகங்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புகைப்படங்கள் அகற்றப்படவில்லை. அரசியல் நாகரிகம் கருதி அவை அப்படியே வைக்கப்பட்டன.
மேலும் படிக்க: சிறுமிகளுக்கு முதலுதவி வழங்கியதை இழிவுபடுத்துவதா? அமைச்சர் விஸ்வநாதன் பதிலடி..
தற்போது புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, சில இடங்களில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படங்களை அகற்ற முயற்சிப்பது தவறு. சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரனும் அவற்றை அகற்ற உத்தரவிடவில்லை. இனி புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டால், அதில் தற்போதைய முதலமைச்சரின் புகைப்படத்தை வைக்கலாம்” என்றார்.
மாநகராட்சி பள்ளிகளில் சம்பந்தமில்லா நபர்களுக்கு அனுமதி இல்லை:
மேலும், மாநகராட்சிப் பள்ளிகளில் வெளிநபர்கள் அனுமதியின்றி மாணவர்களுக்கு உணவுப் பொருட்கள் அல்லது பரிசுப் பொருட்கள் வழங்கக் கூடாது எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். இதுதொடர்பாக பேசிய மேயர் பிரியா, “மாநகராட்சிப் பள்ளிகளுக்கு சம்பந்தமில்லாத நபர்கள் உள்ளே சென்று மாணவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க அனுமதி இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கூட பள்ளித் தலைமை ஆசிரியரின் அனுமதி பெற்ற பிறகே இதுபோன்ற நிகழ்வுகளை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
புகைப்படங்கள், பேனர்கள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவதிலும், அனுமதி வழங்குவதிலும் மாநகராட்சி அதிகாரிகள் பாகுபாடு காட்டக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து நிறுத்தங்களில் கடந்த காலங்களில் அரசின் சாதனைகள் தொடர்பான விளம்பரங்கள் இடம்பெற்றிருந்தன. அதேபோல், தற்போதும் அரசின் சாதனைகள் மட்டுமே இடம்பெற வேண்டும்; கட்சி சார்ந்த விளம்பரங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என அதிகாரிகளுக்கு மேயர் பிரியா அறிவுறுத்தினார்.