Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காதல் தோல்வி.. வாட்ஸ்அப்பில் வந்த ஆடியோ.. ரயில் முன் பாய்ந்த இளைஞர்!

Youth Suicide: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த சக்தி கணேஷ் காதல் தோல்வி காரணமாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஒருதலையாக காதலித்த பெண் திருமணம் செய்து கொண்டதால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் மதுவுக்கு அடிமையாகி, இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது.

காதல் தோல்வி.. வாட்ஸ்அப்பில் வந்த ஆடியோ.. ரயில் முன் பாய்ந்த இளைஞர்!
சக்தி கணேஷ்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 11 Sep 2025 16:57 PM IST

கோவில்பட்டி, செப்டம்பர் 11: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காதல் தோல்வியால் இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உள்ள வள்ளுவர் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ரவி பாண்டியன். இவரது மகன் சக்தி கணேஷ் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 22 வயதான சக்தி கணேஷ் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்தப் பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறு ஒருவரை திருமணம் முடித்துவிட்டு சென்றதாக சொல்லப்படுகிறது. இதனால் சக்தி கணேஷ் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

மதுவிற்கு அடிமை.. வாட்ஸ்அப்பில் ஆடியோ

மேலும் வேலைக்கும் சரிவர செல்லாமல் தனிமையிலேயே இருப்பதுடன் மதுவிற்கு அடிமையாகியுள்ளார்.  அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 09) வழக்கம்போல மது குடித்த சக்தி கணேஷ் திடீரென நள்ளிரவு 12 மணிக்கு தனது நண்பரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அந்த நண்பர் போனை சைலண்ட் மோடில் போட்டதால் எடுக்காமல் இருந்துள்ளார்.

Also Read:  நண்பனை போல் பழகிய ஏஐ செய்த காரியம்.. தாயை கொன்ற முன்னாள் யாகூ மேனேஜர் தற்கொலை.. என்ன நடந்தது?

இதனைத் தொடர்ந்து அவருக்கு சக்தி கணேஷ் வாட்ஸ்அப் மூலம் ஆடியோ ஒன்றை பேசி அனுப்பியுள்ளார். அதில், “உன்னிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை. எதுவும் நினைச்சிக்காத.. எல்லாம் முடிந்து விட்டது. அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் பார்ப்போம். அவ்வளவுதான். நீ காலையில் ஃபோனை எடுத்து இந்த ஆடியோவைப் பார்க்கும்போது தனியார் கல்லூரி அருகே இருக்கும் தண்டவாளத்தில் இருப்பேன். அங்கு என்னை வந்து பார்” என அந்த  தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த நண்பர் தூங்கி விட்டதால் செல்போனை இரவில் பார்க்கவில்லை. இதற்கிடையில் சக்தி கணேஷ் கோவில்பட்டி அருகே உள்ள பெத்தேல் ரயில்வே கேட் பகுதி தண்டவாளத்திற்கு சென்று அந்த வழியாக வந்த ரயில் முன் பாய்ந்து திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் காலையில் சக்தி கணேஷின் நண்பர் தனது செல்போனை எடுத்து பார்த்தபோதுதான் அவர் அனுப்பிய ஆடியோ தெரிய வந்தது.

Also Read:  திருப்பூரில் மீண்டும் அரங்கேறிய வரதட்சணை கொடுமை.. திருமணமான 10 மாதத்தில் பெண் தற்கொலை..!

அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக சக்தி கணேஷின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார் . அதேசமயம் ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் சக்தி கணேஷ் தற்கொலை செய்து கொண்ட இடத்திற்கு அவரது பெற்றோர் பதறி அடித்துக் கொண்டு வந்தனர். அங்கு சிதைந்து கிடந்த தனது மகனின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதது காண்பவர்கள் கண் கலங்க வைத்தது.

(எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)