“திமுககாரனை உங்களால் அசைக்கவே முடியாது”.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு மேயர் பிரியா அதிரடி பதிலடி!
"முதலில் உங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களை மக்களை நேரில் சந்திக்கச் சொல்லுங்கள். இரண்டு, மூன்று மணி நேரம் வெயிலில் நின்று இன்ஸ்பெக்ஷன் செய்து கலப்பணி ஆற்றச் சொல்லுங்கள். அதை விடுத்து, சமூக வலைதளங்களில் 'விர்ச்சுவல் வாரியர்ஸை' வைத்து மற்றவர்களைத் தாக்குவதால் எந்தப் பயனும் இல்லை என்றார்.
சென்னை, ஜுன் 07: தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரின் செயல்பாடுகளைச் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள அவர், தற்போதைய அரசு “ரீல்ஸ் அரசு” என்றும் “ஸ்டிக்கர் அரசு” என்றும் சாடியுள்ளார். “மதிப்புக்குரிய ஆதவ் அர்ஜுனா, ‘அதை பண்ணிடுவோம், இதை பண்ணிடுவோம்’ என்று பேசுகிறார். நீங்கள் எதை வேணாலும் பண்ணுங்க, ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் (திமுக) சேர்ந்த ஒரு தொண்டனைக்கூட உங்களால் அசைக்க முடியாது. தமிழ்நாட்டில் என்றைக்காக இருந்தாலும் கருப்பு சிவப்பு கொடி பறக்கத்தான் செய்யும். இந்த கொடி இல்லையென்றால் தமிழர்களுக்கோ, தமிழ் இனத்திற்கோ இன்று எந்த முன்னிலையும் இருந்திருக்காது. இதனை நாங்கள் தைரியமாக மார்தட்டிச் சொல்வோம்” என்று உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: “ஒரு நல்ல படம் கூட தராதவர், நல்ல ஆட்சி தருவாரா?” முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்!
ரீல்ஸ் மற்றும் ஸ்டிக்கர் ஆட்சி:
புதிய தவெக அரசுக்கு “ரீல்ஸ்க்கும் ரியாலிட்டிக்கும்” வித்தியாசம் தெரியவில்லை என்று பிரியா விமர்சித்தார்.”அமைச்சராக இருப்பவர்கள் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போட்டு அழைப்பு விடுக்கிறார்கள். இது எத்தனை தொழிலாளர்களை ஈர்க்கும் என்று தெரியவில்லை. ஆனால், முத்தமிழறிஞர் கலைஞர் சொல்லியதைச் செயலாக்கிக் காட்டி, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியவர்” என்று ஒப்பிட்டுக் காட்டினார். மேலும், தற்போதைய அரசு புதியதாக எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்றும், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையே தங்களின் திட்டங்களாகக் காட்டி “ஸ்டிக்கர் ஆட்சி” நடத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
வெயிலில் நின்று கலப்பணி ஆற்றுங்கள்:
தவெகவினர் வெறும் மைக் முன்னால் பேசுவதையும், சமூக வலைதளங்களில் அரசியல் செய்வதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மேயர் பிரியா அறிவுறுத்தினார். “முதலில் உங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களை மக்களை நேரில் சந்திக்கச் சொல்லுங்கள். இரண்டு, மூன்று மணி நேரம் வெயிலில் நின்று இன்ஸ்பெக்ஷன் செய்து கலப்பணி ஆற்றச் சொல்லுங்கள். அதை விடுத்து, சமூக வலைதளங்களில் ‘விர்ச்சுவல் வாரியர்ஸை’ வைத்து மற்றவர்களைத் தாக்குவதால் எந்தப் பயனும் இல்லை. இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் ஆகியவற்றால் எதுவும் மாறப்போவதில்லை. பொதுமக்களின் நலம், பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் ஆகிய மூன்றுதான் முக்கியம். அதில் இந்த அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை” என்று சாடினார்.
முதல்வருக்கு ஸ்கிரிப்ட் படிக்கத் தெரியவில்லை:
தவெக முதலமைச்சரின் மேடைப் பேச்சுகளை விமர்சித்த பிரியா, அவர் மேடைகளில் திமுகவை ‘தீய சக்தி’ என்று விமர்சிப்பதைக் சுட்டிக்காட்டினார். “வீட்டில் இருந்து எழுதி எடுத்து வரும் ஸ்கிரிப்ட்டைக் காரில் பயணிக்கும் போதாவது ஐந்து முறை படித்துப் பார்த்திருக்கலாம். மேடையில் பேசும்போது இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை மறந்து போய், மீண்டும் மீண்டும் எடுத்துப் பார்க்கிறார். தான் வெற்றி பெற்ற தொகுதிக்கு நன்றி சொல்லப் போகும் இடத்தில், மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்று பேசத் தெரியாதவர் எப்படி நல்ல முதலமைச்சராக இருக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க: “தவெக-வுக்கு கொள்கை, கோட்பாடு என ஒரு கத்திரிக்காயும் கிடையாது!”.. சரமாரியாக விளாசிய முத்தரசன்!
இதற்கு மாறாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முடிவுகள் வந்த மறுநாளே நேரில் சென்று, எந்தவித அரசியல் விமர்சனமும் இன்றி வாக்களித்த மக்களுக்கு நன்றி மட்டுமே தெரிவித்து அரசியல் நாகரிகத்தைக் கடைப்பிடித்தார் என்று குறிப்பிட்ட பிரியா, தற்போதைய புதிய ஆட்சியாளர்களை “அரசியல் நாகரிகம் தெரியாத தற்குறி கூட்டங்கள்” என்று மிகக் காட்டமாக விமரிசித்தார்.