சிவகங்கையில் தனியாக வசித்து வந்த பெண்.. நோட்டமிட்ட கயவர்கள் கூட்டம்.. திட்டமிட்டு நடந்த கொடூர கொலை- கொள்ளை!
Manamadurai Woman Murder : சிவகங்கை மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அத்துமீறி நுழைத்து அவரை கொடூரமாக கொலை செய்து 8 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர் .
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் வசித்து வந்தவர் வசந்த மல்லிகா. இவர், அரசு விடுதியில் வார்டனாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர், தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இன்று வியாழக்கிழமை அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தனியாக இருந்த வசந்த மல்லிகாவை கொடூரமாக தாக்கினர். இதை சற்றும் எதிர்பாராத வசந்த மல்லிகா அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தும் முடியவில்லை. உடனே, அந்த கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவரை கொடூரமாக கொலை செய்தது. தொடர்ந்து, அவர் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றது. வெகு நேரம் ஆகியும் அவரது வீட்டின் கதவு திறந்து கிடந்த நிலையில் அக்கம், பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.
ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த பெண்
தொடர்ந்து, அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வசந்த மல்லிகா ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படையில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட வசந்த மல்லிகாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: சிறுமி மாயமான வழக்கில் புதிய தகவல் – புதிய கோணத்தில் விசாரணை




மானாமதுரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில், மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி தீவிர ஆய்வு செய்து வருகின்றனர். வீட்டில் தனியாக வசித்து வருவதை நன்கு அறிந்த நபர்களே இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கொலையாளிகளை தேடும் தனிப்படை போலீசார்
அதன் அடிப்படையில், கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்வதற்காக மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா உத்தரவின் அடிப்படையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேர்தல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. பட்டப் பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: கவுன்சிலருக்கு மட்டுமில்ல எனக்கே இந்த நிலை தான்.. சென்னை மாநகராட்சியை கலைத்து விடலாம்.. கூட்டத்தில் கொந்தளித்த மேயர் ஆர். பிரியா!