கவுன்சிலருக்கு மட்டுமில்ல எனக்கே இந்த நிலை தான்.. சென்னை மாநகராட்சியை கலைத்து விடலாம்.. கூட்டத்தில் கொந்தளித்த மேயர் ஆர். பிரியா!
Mayor R Priya Latest Speech : சென்னை மாநகராட்சியை கலைத்து விடலாம் என்று மாமன்ற கூட்டத்தில் மேயர் ஆர். பிரியா ஆக்ரோஷமாக பேசினார். அரசு நிகழ்ச்சிகள் குறித்து மாமன்ற மேயர் உள்பட யாருக்கும் முறையான தகவல் இல்லாத குறிப்பிட்டு அவ்வாறு பேசினார்.
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் இன்று வியாழக்கிழமை 9 அக்டோபர் 29- ஆம் தேதி) நடைபெற்றது. ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, துணை மேயர் மகேஷ் குமார் பேசுகையில், சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள ஒரு பூங்கா புனரமைக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தார். மண்டல குழு தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. அதிகாரிகள் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார். உடனே, மாமன்ற உறுப்பினர்கள் பலர் எழுந்து எங்கள் வார்டுகளிலும் இதே நிலைமை உள்ளது என்று தெரிவித்தனர். அத்துடன் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தங்களை அழைப்பது இல்லை எனவும், ஆணையாளர் இதற்கு பதில் தெரிவிக்க வேண்டும் எனக் கூறி அமளியில் ஈடுபட்டனர்.
உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி எனக்கே இந்த நிலை தான்
இதைத் தொடர்ந்து, மேயர் பிரியா பேசுகையில், மாமன்ற உறுப்பினர்கள் மட்டும் இல்லை. எனக்கே அத்தகைய நிலைமை தான் உள்ளது. முதல்வர் ரிப்பன் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதை பற்றி என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், வெளியில் முதல்வர் கூட்டத்தை புறக்கணித்ததாக செய்திகள் வருகிறது. முதல்வர் வருகிறார் என்றால் அவர் வரும் நேரத்தை சொல்ல வேண்டும். நான் காலை முதல் இரவு வரை ரிப்பன் மாளிகையிலேயே இருக்க முடியுமா.
மேலும் படிக்க: திருச்சி விமான நிலையத்தில் அதிர்ச்சி.. பயணி உடைமையில் நெளிந்த உயிரினம்.. டிஆர்ஐ அதிகாரிகள் ஷாக்!
நாங்களும் மக்கள் பிரதிநிதிகள் தான்
மாமன்ற உறுப்பினர்களை புறக்கணிக்க கூறி அதிகாரிகளுக்கு எதுவும் அறிவிப்பு வந்திருக்கிறதா. எத்தனை முறை தெரிவிப்பது. கவுன்சிலர்கள் மக்களின் குறைகளை கேட்டு அதிகாரிகளிடம் தொடர்ந்து முறையிட்டு ஒரு வேலையை செய்தால் அதை எம்எல்ஏக்கள் வந்து திறந்து வைப்பதா. சட்டமன்ற உறுப்பினர்களும் மக்கள் பிரதிநிதிகள் தான். நாங்களும் மக்கள் பிரதிநிதிகள் தான். மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்க விரும்பவில்லை எனில் மாநகராட்சியை கலைத்து விடலாம்.
சென்னை மாநகராட்சியை கலைத்து விடலாம்
அதிகாரிகள் மட்டுமே கூட்டத்தை நடத்தட்டும் என்று மேயர் பிரியா ஆவேசமாக பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு சென்னை மாநகராட்சி மேயருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். முதல்வர் நிகழ்ச்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தால் மரபுப்படி மேயர் பங்கேற்பார் என துணை மேயர் கூறினார். இத்தகைய வாக்குவாதங்கள் மாநகராட்சி ஆணையர் சமீரன் முன்னிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தேனியில் பகீர் வேட்டை.. யானை தந்தம் கடத்திய 4 பேர் அதிரடி கைது.. வனத்துறை அதிரடி நடவடிக்கை!

