Tamil Nadu Rains: அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்தில் மழை இருக்குமா?
Rainfall Alert: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (அக்டோபர் 29), நாளை (அக்டோபர் 30) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 29, 2026: அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் இந்த அமைப்பு, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தமிழகத்தில் வரும் நாட்களில் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நவம்பர் 2ஆம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
அக்டோபர் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தெற்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அக்டோபர் 31ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்: சிறைப் பாதுகாப்பு குறித்து ஆலோசனை?
நவம்பர் 1ஆம் தேதி வடக்கு கடலோர தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 2, 3ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!
நவம்பர் 2ஆம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 3ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
மேலும் படிக்க: மோசடி வழக்கு : தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் சரண்
நவம்பர் 4ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழையும், ஏனைய தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையில் வறண்ட வானிலை நிலவும்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (அக்டோபர் 29), நாளை (அக்டோபர் 30) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.