தீபாவளிக்கு ரூ.200க்கு 10 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு: கூட்டுறவு அங்காடிகளில் நாளை முதல் விற்பனை
Diwali Grocery Kit Announced : தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் மளிகைப் பொருள்கள் கிடைக்கும் வகையில், 10 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பைக் கூட்டுறவு அங்காடிகளில் ரூ.200க்கு விற்பனை செய்யத் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் என்னென்ன பொருட்கள் வழங்கப்படும் என பார்க்கலாம்.
சென்னை, அக்டோபர் 29 : தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் மளிகைப் பொருள்கள் கிடைக்கும் வகையில், 10 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பைக் கூட்டுறவு அங்காடிகளில் ரூ.200க்கு விற்பனை செய்யத் தமிழக அரசு (TN Government) முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை சென்னையில் அக்டோபர் 30, 2026 தொடங்கி வைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
தீபாவளிக்கு ரூ.200க்கு 10 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு
இந்தத் தொகுப்பில், கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, மிளகாய், கடுகு, சீரகம் உள்ளிட்ட 10 மளிகைப் பொருள்கள் இடம்பெறும். தமிழகத்தில் அரிசி, மளிகைப் பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது. பண்டிகைக் காலத்தில் கட்டுக்கடங்காமல் உயரும் விலைவாசியைச் சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சிகளும் அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்தச் சூழலில், தீபாவளிக்கு முன்பாக இந்தக் குறைந்த விலை மளிகைத் தொகுப்பை அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிக்க : மின்வாரியத்தில் 8,000 கள உதவியாளர் பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப அரசு அனுமதி




ஏற்கெனவே, சன்ன ரக அரிசியைக் கூட்டுறவு அங்காடிகளில் கிலோ ரூ.30-க்கும், வெங்காயத்தை நியாய விலைக் கடைகளில் கிலோ ரூ.35க்கும் அரசு விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பொங்கல் பண்டிகையின்போது வழங்கப்படுவதைப் போல, தீபாவளிக்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மளிகைப் பரிசுத் தொகுப்பு வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. சமையல் எண்ணெய், நெய், மைதா, கடலை மாவு, ரவை, உளுத்தம் பருப்பு, சர்க்கரை, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட, தீபாவளிப் பலகாரங்கள் செய்யத் தேவையான பொருள்கள் அடங்கிய ரூ.500 முதல் ரூ.600 மதிப்பிலான தொகுப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்பட்டது. மாநிலத்தில் சுமார் 2.29 கோடி குடும்ப அட்டைகள் உள்ள நிலையில், அவ்வாறு வழங்கினால் அரசுக்கு ரூ.1,000 கோடிக்கும் மேல் செலவாகும் எனக் கணிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது கூட்டுறவு அங்காடிகளில் ரூ.200 கொடுத்து வாங்கக்கூடிய மளிகைத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
புதுச்சேரியில் ரூ.700 தொகுப்பு
அண்டை மாநிலமான புதுச்சேரியில், தீபாவளியை முன்னிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.700 மதிப்பிலான மளிகைப் பொருள்கள் வழங்கப்படும் என அந்த அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது விலைவாசி உயர்ந்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் அரசின் இந்த முடிவு மக்களுக்கு தற்காலிக ஆறுதலாக இருக்கும் என கூறப்படுகிறது.