TN Cabinet: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 4 முக்கிய முடிவுகள்! விவாதிக்கப்பட்ட முக்கிய விஷயங்கள் – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..
Minister Nirmal Kumar: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் விவகாரம் தொடர்பாகப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், அவர் தவறு செய்திருப்பதாகவும், கல்வி நிறுவனங்களிடம் பணம் பெற்றதாகவும் குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தெளிவாகக் கருத்து தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் குறிப்பிட்டார்.'
அக்டோபர் 29, 2026: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய விவகாரங்கள் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் 4 முக்கிய முடிவுகள்!
அமைச்சரவைக் கூட்டத்தில் நான்கு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். எட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், சமூகநீதி சார்ந்த விவகாரங்களை ஆய்வு செய்வதற்காக ஆணையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முக்கிய அறிவிப்பு!
இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகள் இல்லை என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிந்ததும், பிப்ரவரி மாதத்தில் ஆணையம் அமைத்து சமூகநீதி கணக்காய்வு நடத்தப்படும் என்றும் கூறினார். சமூகநீதி தொடர்பான விவரங்களுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
தாழம்பூர் நில விவகாரம் குறித்து ஆலோசனை!
தாழம்பூரில் 600 ஏக்கர் நிலங்களின் பட்டாக்கள் மாற்றப்பட்ட விவகாரத்தில் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் குறிப்பிட்டார். இந்த நிலங்கள் தொடர்பாக ஆய்வு செய்து உரிய முடிவுகளை எடுப்பது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க: தீபாவளிக்கு ரூ.200க்கு 10 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு: கூட்டுறவு அங்காடிகளில் நாளை முதல் விற்பனை
தமிழகத்தில் மழைக்காலங்களில் மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் விஜய் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை ஆய்வு செய்து, அவற்றின் மீது உடனடியாக உரிய தீர்வு காண வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியதாகக் கூறினார்.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை குறித்து விளக்கம்!
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் விவகாரம் தொடர்பாகப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், அவர் தவறு செய்திருப்பதாகவும், கல்வி நிறுவனங்களிடம் பணம் பெற்றதாகவும் குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தெளிவாகக் கருத்து தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.’
மேலும் படிக்க: கவுன்சிலருக்கு மட்டுமில்ல எனக்கே இந்த நிலை தான்.. சென்னை மாநகராட்சியை கலைத்து விடலாம்.. கூட்டத்தில் கொந்தளித்த மேயர் ஆர். பிரியா!
பல கல்வி நிறுவனங்கள் இன்னும் அச்சத்தின் காரணமாகப் புகார் அளிக்காமல் இருப்பதாகக் கூறிய அவர், இந்த நடவடிக்கையில் அரசியல் பழிவாங்கும் நோக்கம் இல்லை என்றும், புகார்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
திமுக ஆட்சிக் காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மூடி மறைக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டிய அவர், தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். திமுக முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் விளக்கமளித்தார்.
செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்!
செஞ்சி சிறுமி காணாமல் போன விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், சிறைகளில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மத்திய சிறையில் கூடுதலாக ஸ்கேனிங் இயந்திரம் வைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.