நவம்பர் 2ஆம் தேதி புதுக்கோட்டையில் முதல்வர் விஜய் ரோடு ஷோ..! பிளான் என்ன?
CM Vijay Road Show: முதலமைச்சர் விஜய் நவம்பர் 2ஆம் தேதி அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், பொதுமக்களை நேரில் சந்திக்கும் வகையில் ரோட் ஷோவும் மேற்கொள்ள உள்ளார். புதுக்கோட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக இந்த ரோட் ஷோ நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 29, 2026: தமிழக முதலமைச்சர் விஜய், வரும் நவம்பர் 2-ம் தேதி புதுக்கோட்டைக்கு வருகை தந்து, நிறைவடைந்துள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைத் திறந்து வைக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து, பயனாளிகளுக்கு அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் விஜய், அந்த வகையில் புதுக்கோட்டையிலும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார்.
ரூ.19 கோடியில் புதிய பேருந்து நிலையம்
புதுக்கோட்டை நகரின் சத்தியமூர்த்தி சாலையில் ரூ.19 கோடி மதிப்பில் பல்வேறு அடிப்படை வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்தப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை திசை திருப்பவே இந்த சோதனை நடக்கிறது – கே.என் நேரு..
கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய பேருந்து நிலையம் திறப்பு விழாவுக்குத் தயாராக உள்ளது. நவம்பர் 2-ம் தேதி புதுக்கோட்டைக்கு வரும் முதலமைச்சர் விஜய், இந்தப் பேருந்து நிலையத்தைத் திறந்து வைக்க உள்ளார்.
புதிய உள்விளையாட்டு அரங்கமும் திறப்பு
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் புதிய உள்விளையாட்டு அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கும், உள்விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கும் உதவும் வகையில் இந்த அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்துடன் சேர்த்து இந்த உள்விளையாட்டு அரங்கத்தையும் முதலமைச்சர் விஜய் திறந்து வைக்க உள்ளார்.
புதுக்கோட்டையில் ரோட் ஷோ நடத்தத் திட்டம்
முதலமைச்சர் விஜய் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், பொதுமக்களை நேரில் சந்திக்கும் வகையில் ரோட் ஷோவும் மேற்கொள்ள உள்ளார். புதுக்கோட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக இந்த ரோட் ஷோ நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் வருகையையொட்டி, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தயாராகி வருகின்றனர். ரோட் ஷோ நடைபெற உள்ள வழித்தடங்கள் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தல்.. நா வரேன் போட்டிக்கு.. சீமான் மாஸ் அறிவிப்பு!
முதலமைச்சர் விஜய், நவம்பர் 2-ம் தேதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார். அங்கிருந்து சாலை மார்க்கமாகப் புதுக்கோட்டைக்குச் சென்று அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.