2021 சைக்கிளில் சென்று திமுகவுக்கு வாக்களித்தவர் தான் விஜய்.. அதிமுக பற்றி பேச என்ன தகுதி உள்ளது – எடப்பாடி பழனிசாமி தாக்கு..
EPS Attack On CM Vijay: 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது சைக்கிளில் கருப்பு, சிவப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு வாக்குச்சாவடிக்குச் சென்று திமுகவுக்கு விஜய் வாக்களித்ததாக அவர் கூறினார். திமுகவின் அடையாளத்துடன் சென்று அந்தக் கட்சிக்கு வாக்களித்தவர் தற்போது அதிமுகவை விமர்சிப்பதாகவும் கேள்வி எழுப்பினார்.
செப்டம்பர் 27, 2026: 2021 ஆம் ஆண்டு சைக்கிளில் கருப்பு மற்றும் சிவப்பு நிற ஸ்டிக்கர் அணிந்து திமுகவின் அடையாளம் போட்டி வாக்குச்சாவடிக்கு போய் அந்த கட்சிக்கு வாக்களித்தவர் தான் விஜய் என எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்து இருக்கிறார். அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. தாராபுரத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசினார்.
திமுக ஸ்டிக்கரை சைக்கிளில் ஒட்டி சென்று வாக்களித்தவர் தான் விஜய்:
திமுகவின் கிளை கட்சியாக அதிமுக செயல்படுவதாக விஜய் கூறி வருவதாக குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, அதற்கு பதிலளிக்கும் வகையில் விஜய்யின் கடந்தகால அரசியல் நிலைப்பாட்டை விமர்சித்தார்.
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது சைக்கிளில் கருப்பு, சிவப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு வாக்குச்சாவடிக்குச் சென்று திமுகவுக்கு விஜய் வாக்களித்ததாக அவர் கூறினார். திமுகவின் அடையாளத்துடன் சென்று அந்தக் கட்சிக்கு வாக்களித்தவர் தற்போது அதிமுகவை விமர்சிப்பதாகவும் கேள்வி எழுப்பினார்.
தமிழக வெற்றிக்கழகம் தொடங்கப்பட்டு சில ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில், பல ஆண்டுகால அரசியல் வரலாற்றைக் கொண்ட அதிமுக குறித்து விஜய் கருத்து தெரிவிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
மேலும் படிக்க: மண் திருட்டு புகார்.. அரசுக்கு ரூ. 8.22 கோடி இழப்பு.. முன்னாள் அமைச்சர் எ.வ வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு..
கரூர் சம்பவம் குறித்து கேள்வி
கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தையும் தனது பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை என்றும், காயமடைந்தவர்களை நேரில் சந்திக்கவில்லை என்றும் விஜய்யை அவர் குற்றம்சாட்டினார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பின்னர் சென்னைக்கு அழைத்து ஆறுதல் கூறியது முறையான அணுகுமுறையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
“இது வெளிப்படையான அரசியலா?”
மேலும், வேறு கட்சியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினரை ராஜினாமா செய்ய வைத்து தனது கட்சியில் இணைத்துக்கொண்டு, அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்ததால் இடைத்தேர்தல் நடைபெறுவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார்.
மேலும் படிக்க: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் 1.28 லட்சம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்.. நாளை மதுரையில் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்..
மேலும், தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கு ஆதரவளித்த இடதுசாரி கட்சிகளே தற்போது அக்கட்சிக்கு எதிராக இடைத்தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறிய எடப்பாடி பழனிசாமி, ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தமிழக வெற்றிக்கழக அரசு நிறைவேற்றவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.