AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு.. மறுபரிசீலனை செய்யுமாறு வைத்த கோரிக்கை.. முழு விவரம்!!

மத்திய அல்லது மாநில அரசின் சார்பில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் எந்தவொரு திட்டமாக இருந்தாலும், அதில் மக்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலோ அல்லது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டாலோ, அவற்றை அரசு பிடிவாதமாகச் செயல்படுத்தக் கூடாது என்ற கோரிக்கையை விசிக முன்வைத்துள்ளது. மக்கள் எதிர்க்கும் திட்டங்களை அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு.. மறுபரிசீலனை செய்யுமாறு வைத்த கோரிக்கை.. முழு விவரம்!!
முதல்வர் விஜய், திருமாவளவன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 02 Jul 2026 13:46 PM IST

சென்னை, ஜூலை 02: தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இன்று திடீரென சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் நிலவி வரும் அண்மைக்கால அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் இந்த சந்திப்பு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத் தோழமைக் கட்சிகளின் கூட்டுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்ற நிலையில், அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை திருமாவளவன் நேரில் சந்தித்து பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: தவெக எம்எல்ஏக்களிடம் பேரம்.. செந்தில் பாலாஜி, அவரது தம்பியை வலைவீசி தேடும் போலீஸ்.. பெரும் பரபரப்பு!!

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு மத்தியில், மக்கள் நலன் சார்ந்த மற்றும் மத்திய-மாநில அரசுத் திட்டங்கள் தொடர்பான நான்கு முக்கிய கோரிக்கைகளை இந்த சந்திப்பின் போது திருமாவளவன் முதலமைச்சரிடம் விரிவாக முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபி ஜிராம்ஜி திட்டம் மற்றும் நிதிப் பகிர்வு விவகாரம்:

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள விபி ஜிராம்ஜி திட்டம் மற்றும் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு நடைமுறைகள் தொடர்பாகத் தமிழக அரசுக்கு இருக்கும் அதிருப்தியை விசிக முழுமையாக ஆதரிக்கிறது. இத்திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், மாநிலங்களின் சுயாட்சி உரிமைகளுக்கு மதிப்பளித்து நிதிப் பகிர்வை முறையாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நேற்றுதான் பாரதப் பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியிருந்தார். இச்சூழலில், இந்த நிதிப் பகிர்வு விவகாரத்தில் தமிழக அரசின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு விசிக தனது முழு ஆதரவை இச்சந்திப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

குமரி அணுக்கழிவுத் திட்ட அரசாணைக்கு எதிர்ப்பு:

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கன்னியாகுமரி கனிம வள அணுக்கழிவு திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து, தமிழக அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டிருந்தது. இத்திட்டத்திற்கு அப்பகுதி பொதுமக்களிடையேயும், இயற்கை ஆர்வலர்களிடையேயும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அணுக்கழிவுத் திட்டத்திற்கான இந்த அரசாணையைத் தமிழக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும் என்று திருமாவளவன் முதலமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்ப்புத் திட்டங்களை மறுபரிசீலனை செய்க:

மத்திய அல்லது மாநில அரசின் சார்பில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் எந்தவொரு திட்டமாக இருந்தாலும், அதில் மக்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலோ அல்லது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டாலோ, அவற்றை அரசு பிடிவாதமாகச் செயல்படுத்தக் கூடாது என்ற கோரிக்கையை விசிக முன்வைத்துள்ளது. மக்கள் எதிர்க்கும் திட்டங்களை அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆணவக் கொலை தடுப்புச் தனிச் சட்டம்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நீண்ட காலமாகத் தமிழகத்தில் வலியுறுத்தி வரும் மிக முக்கிய கோரிக்கையான ‘ஆணவக் கொலை தடுப்பு தனிச் சட்டம்’ குறித்தும் இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய புதிய தவெக ஆட்சிக் காலத்திலேயே இதற்கான பிரத்யேக சட்ட முன்வடிவைச் சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று திருமாவளவன் முதலமைச்சரிடம் கோரியுள்ளார்.

மேலும் படிக்க: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பின்னடைவு.. சர்ச்சை பேச்சு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

மத்திய அரசின் மக்கள் விரோதத் திட்டங்களை எதிர்ப்பதிலும், மாநில உரிமைகளை மீட்டெடுப்பதிலும் தவெக – விசிக கூட்டணி வலுவாக உள்ளதைக் காட்டும் வகையில் அமைந்துள்ள இந்த திடீர் சந்திப்பு, தமிழகத்தின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்கு மிக முக்கிய அடித்தளமாகப் பார்க்கப்படுகிறது.

Follow Us