முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பின்னடைவு.. சர்ச்சை பேச்சு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!
இதனையடுத்து, சென்னை மாநகராட்சி கவுன்சிலரான உமாநந்தன் என்பவர், வெறுப்புப் பேச்சு பேசிய பொன்முடி மீது மதரீதியான வெறுப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு பின்னர் மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
சென்னை, ஜூலை 02: பெண்கள் மற்றும் மதம் குறித்து சர்ச்சை கருத்துக்களைத் தெரிவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கின் பின்னணி மற்றும் நீதிமன்ற விவாதங்கள் குறித்த முழு விவரங்களை அறியலாம். சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் படிக்க: 1000 கார்கள், 200-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் தவெக-வில் இணைய வந்த அதிமுக தொண்டர்கள்.. மகாபலிபுரத்தில் அலைமோதும் கூட்டம்..
பொன்முடி மீதான வழக்கு:
இதனையடுத்து, சென்னை மாநகராட்சி கவுன்சிலரான உமாநந்தன் என்பவர், வெறுப்புப் பேச்சு பேசிய பொன்முடி மீது மதரீதியான வெறுப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு பின்னர் மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
பொன்முடி தரப்பு வாதம்:
சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி, பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி தரப்பில், “ஒரு மூடிய அரங்கிற்குள் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பேச்சு தொடர்பாக இந்த தனிநபர் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய வழக்கைத் தொடர்வதற்கு முன்னதாக அரசின் உரிய அனுமதி பெறப்படவில்லை என்பதால், இந்த வழக்கை தொடர்ந்து நடத்த சட்டப்படி இடமில்லை” என்று வாதாடப்பட்டது.
புகார்தாரர் தரப்பு வாதம்:
இதற்கு மறுப்பு தெரிவித்து புகார் தாரரான உமாநந்தன் தரப்பில், “தன்னுடைய பேச்சு ஊடகங்கள் வாயிலாக பரவி, பிற மதத்தினரைச் சென்றடையும் என்பதைத் தெரிந்தே பொன்முடி இந்த வெறுப்புப் பேச்சைப் பேசியுள்ளார். இதே விவகாரத்தில் ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து (Suo Motu) வழக்கை விசாரணைக்கு எடுத்து, வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தது. எனவே, இந்த வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும்” என்று வலுவான வாதம் முன்வைக்கப்பட்டது.
மேலும் படிக்க: ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம்.. செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது FIR பதிவு.. வெளியான ஷாக் விவரங்கள்!!
நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு:
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இளந்திரையன், முன்னாள் அமைச்சர் பொன்முடி தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் இந்த சர்ச்சை பேச்சு வழக்கை அவர் நீதிமன்றத்தில் தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.