AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுகவிற்கு விழுந்த பலத்த அடி!!.. முடிவுக்கு வந்த 9 ஆண்டுகால மெகா கூட்டணி.. மு.க.ஸ்டாலினின் அடுத்த வியூகம் என்ன?

தவெக தலைமையில் புதிய அரசு அமைந்த சில நாட்களிலேயே, திமுக கூட்டணி முழுமையாகச் சிதறியது. திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக வெளியேறிய காங்கிரஸ், தவெக அரசுக்கு ஆதரவளித்து அமைச்சரவையிலும் இடம்பிடித்தது. முதலில் வெளியிலிருந்து ஆதரவு தருவதாகக் கூறிய விசிக மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் தற்போது தவெக அமைச்சரவையில் இணைந்துள்ளன.

திமுகவிற்கு விழுந்த பலத்த அடி!!.. முடிவுக்கு வந்த 9 ஆண்டுகால மெகா கூட்டணி.. மு.க.ஸ்டாலினின் அடுத்த வியூகம் என்ன?
முறிந்த திமுக கூட்டணி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 02 Jul 2026 07:16 AM IST

சென்னை, ஜூலை 02: தமிழக அரசியலில் கடந்த பல தேர்தல்களாகத் தொடர் வெற்றிகளைக் குவித்து, “வெற்றிக் கூட்டணி” என நிரூபித்த திமுக தலைமையிலான மெகா கூட்டணி, 2026 தேர்தல் தோல்விக்குப் பிறகு தற்போது முழுமையாகச் சிதறி உடைந்துள்ளது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அன்றைய ஆளுங்கட்சியான அதிமுகவிற்கு எதிராக திமுக, காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் ஓரணியில் திரண்டன. பாஜாகவிற்கு எதிரான இந்த “கொள்கை கூட்டணி” 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2024 மக்களவை தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் அடுத்தடுத்து பிரம்மாண்ட வெற்றிகளைக் குவித்தது.

மேலும் படிக்க: வைகோவிடம் வருத்தம், ப.சிதம்பரத்துடன் ரகசிய ஆலோசனை.. தவெக தோழமைக் கட்சி கூட்டத்தில் முதல்வர் விஜய் அதிரடி!!

கூட்டணி உடையக் காரணம் என்ன?

2026 சட்டமன்றத் தேர்தலின் போது தொகுதிகள் பங்கீட்டில் ஏற்பட்ட முரண்பாடுகளே இந்த உடைவுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. 2026 தேர்தலில் காங்கிரஸ் மற்றும் விசிக ஆகிய கட்சிகளுக்கு மட்டுமே தொகுதிகள் உயர்த்தப்பட்ட நிலையில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையை திமுக குறைத்தது.

மேலும், சிறிய கட்சிகளைத் தனிச் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்காமல், திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே போட்டியிடுமாறு நெருக்கடி கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் நீதி மையம் ஆகியவை திமுகவுடன் முரண்பட்டன. தேமுதிக, எஸ்டிபிஐ போன்ற புதிய கட்சிகளின் வரவு இருந்தபோதிலும், 2026 தேர்தலில் திமுகவால் வெற்றி பெற முடியவில்லை.

தவெகவுடன் கைகோர்த்த தோழமைக் கட்சிகள்:

தேர்தல் முடிந்து தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையில் புதிய அரசு அமைந்த சில நாட்களிலேயே, திமுக கூட்டணி முழுமையாகச் சிதறியது. திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக வெளியேறிய காங்கிரஸ், தவெக அரசுக்கு ஆதரவளித்து அமைச்சரவையிலும் இடம்பிடித்தது. முதலில் வெளியிலிருந்து ஆதரவு தருவதாகக் கூறிய விசிக மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் தற்போது தவெக அமைச்சரவையில் இணைந்துள்ளன.

மதிமுகவும் திமுக கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறிவிட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை, கூட்டணி குறித்த தங்களது நிலையைத் தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம் எனத் தள்ளிப்போட்டுள்ளது.

திமுகவின் அடுத்த வியூகம்:

முக்கியக் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் வெளியேறியுள்ள சூழலில், “இனி திமுக தனித்துதான் போட்டியிட வேண்டும்” என அக்கட்சியின் தொண்டர்களும், முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட மூத்த தலைவர்களும் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். இதனைப் பரிசீலிப்போம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பச்சைக் கொடி காட்டியுள்ளார்.

மேலும் படிக்க: தவெக ஆட்சி கவிழ்ப்பு விவகாரம்.. கைதான 3 பேருக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல்..!

தேமுதிக, மனிதநேய மக்கள் கட்சி, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட சில கட்சிகள் இன்னும் திமுக கூட்டணியில் தொடர்ந்த போதிலும், 9 ஆண்டுகால மெகா கூட்டணி முடிவுக்கு வந்துள்ளதால், வரும் தேர்தல்களில் தனித்து களம் காணப்போகும் திமுகவின் அடுத்தகட்ட அரசியல் வியூகம் என்னவாக இருக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் எழுந்துள்ளது.

Follow Us