AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வைகோவிடம் வருத்தம், ப.சிதம்பரத்துடன் ரகசிய ஆலோசனை.. தவெக தோழமைக் கட்சி கூட்டத்தில் முதல்வர் விஜய் அதிரடி!!

தற்போது தவெக-விற்கு ஆதரவு அளித்துள்ள இயக்கங்களை முறைப்படி ஒரே கூட்டணியாகத் திரட்டும் முயற்சியில் இந்த முதல் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக மீண்டும் ஒரு கூட்டம் நடைபெறும் என்றும், அந்த கூட்டத்தில் இந்தத் தவெக தலைமையிலான கூட்டணிக்கு ஒரு அதிகாரப்பூர்வமான 'புதிய பெயர்' சூட்டப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வைகோவிடம் வருத்தம், ப.சிதம்பரத்துடன் ரகசிய ஆலோசனை.. தவெக தோழமைக் கட்சி கூட்டத்தில் முதல்வர் விஜய் அதிரடி!!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 02 Jul 2026 06:26 AM IST

சென்னை, ஜூலை 02: தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்த கட்சிகளை ஒரு முறையான கூட்டணிக் கட்டமைப்பாக மாற்றுவதற்கான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னை அடுத்த கோவலத்தில் நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பல அதிரடி முடிவுகளும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. குறிப்பாக, முதல்வர் விஜய் கூட்டணியின் எதிர்காலம் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பகிர்ந்து கொண்ட முக்கிய விவரங்கள் வெளியாகியுள்ளன. அவைப் பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

மேலும் படிக்க: தவெக தலைமையில் புதிய கூட்டணி.. விரைவில் பெயர்.. ஒருங்கிணைப்பாளர் நியமனம்!

எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் விஜய் பதிலடி:

இக்கூட்டத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளிடையே பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குக் கடுமையான பதிலடி கொடுத்தார்.

அவர் பேசுகையில், “தவெக தற்போது மிகவும் வலிமையான கட்சியாக உருவெடுத்துள்ளது. இன்னும் சில கட்சிகள் நம்முடன் கூட்டணிக்கு வரவுள்ளன. இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த கூட்டணி நிலைத்து நிற்கப் போகிறது. ‘இரண்டு மாதங்கள் அல்லது ஆறு மாதங்களில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும்’ என்றெல்லாம் சிலர் பேசி வருகிறார்கள். ஆனால், வரக்கூடிய அனைத்து ஆண்டுகளிலும் தவெக ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது. எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள இந்த அரசு தயாராக உள்ளது” எனத் தீர்க்கமாக முழங்கினார்.

கூட்டணிக்கு புதிய பெயர்: அடுத்தக்கட்ட திட்டம்

தற்போது தவெக-விற்கு ஆதரவு அளித்துள்ள இயக்கங்களை முறைப்படி ஒரே கூட்டணியாகத் திரட்டும் முயற்சியில் இந்த முதல் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக மீண்டும் ஒரு கூட்டம் நடைபெறும் என்றும், அந்த கூட்டத்தில் இந்தத் தவெக தலைமையிலான கூட்டணிக்கு ஒரு அதிகாரப்பூர்வமான ‘புதிய பெயர்’ சூட்டப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தலைவர்களுடன் தனித்தனியாகப் பேசிய முதல்வர்:

பொதுவான ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளின் முக்கியத் தலைவர்களான ப. சிதம்பரம், தொல். திருமாவளவன், காதர் மைதீன், வைகோ மற்றும் துரை வைகோ ஆகியோரை முதலமைச்சர் விஜய் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார்.

குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தின் கையைப் பிடித்து, அவரைத் தனியாக அழைத்துச் சென்று முதலமைச்சர் விஜய் சில முக்கிய விஷயங்களை விவாதித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் பேசிய முதல்வர் விஜய், மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) இந்த முக்கியக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது தனக்கு வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“இது ஒரு புதிய மாடல் ஆட்சி”

இக்கூட்டத்திற்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் தொல். திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசினர். தலைவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருந்த போதிலும், இக்கூட்டத்தின் செய்தித் தொடர்பாளராக மாணிக்கம் தாகூர் மட்டுமே செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், “நாங்கள் தற்போது பேசிக்கொண்டிருப்பது தமிழ்நாட்டு அரசியலை மட்டுமே. தமிழக முதல்வர் திரு. விஜய் அவர்களின் தலைமையில் அமைந்துள்ள இந்தத் தவெக அரசில் காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இது ஒரு புதிய மாடல் ஆட்சியாக உருவாகியுள்ளது. இந்த அரசின் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து மட்டுமே கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது” என்று தெளிவுபடுத்தினார்.

INDIA கூட்டணியில் தவெக இணையுமா?

தேசிய அளவில் “INDIA” கூட்டணியில் தவெக இடம்பெறுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு மாணிக்கம் தாகூர் மிகத் தெளிவாகப் பதிலளித்தார். அவர் கூறுகையில், “நாடாளுமன்ற உறுப்பினர்களை (MP) வைத்துள்ள கட்சிகள் மட்டுமே தற்போது INDIA கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. காங்கிரஸ், விசிக, மதிமுக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு எம்பிக்கள் இருப்பதால் நாங்கள் அக்கூட்டணியில் இருக்கிறோம்.

மேலும் படிக்க: தவெக ஆட்சி கவிழ்ப்பு விவகாரம்.. கைதான 3 பேருக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல்..!

தவெக என்றைக்கு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்து, நாடாளுமன்ற உறுப்பினரை டெல்லிக்கு அனுப்புகிறதோ, அன்றைக்கு அக்கூட்டணியில் சேர்ப்பது குறித்து விவாதிக்கப்படும்” என்று கூறினார். தற்போது மாநில அரசியலில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும், தேர்தல் வரும் போது அதுகுறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Follow Us