1000 கார்கள், 200-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் தவெக-வில் இணைய வந்த அதிமுக தொண்டர்கள்.. மகாபலிபுரத்தில் அலைமோதும் கூட்டம்..
இந்த மெகா இணைப்பு விழாவிற்காக, முன்னாள் அமைச்சர்களின் சொந்த தொகுதியான விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மாமல்லபுரத்திற்கு அணிவகுத்து வந்த வண்ணம் உள்ளனர். சுமார் 10,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் தவெக-வில் தங்களை இணைத்துக் கொள்ள பேருந்துகள் மூலம் மாமல்லபுரம் பகுதிக்கு வருகை தந்துள்ளனர்.
சென்னை, ஜூலை 02: தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மகாபலிபுரத்தில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று இணைகிறார். இதனிடையே, தனது புதிய அரசியல் பயணம் குறித்துப் பேசிய சி.விஜயபாஸ்கர், “இது ஒரு நிமிடத்திலோ அல்லது ஒரு நாளிலோ எடுத்த முடிவல்ல. விராலிமலை தொகுதி மக்கள், வாக்களித்த வாக்காளர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவருடைய உணர்வுகளுக்கும் கருத்துகளுக்கும் மதிப்பளித்து எடுக்கப்பட்ட மகத்தான முடிவு இது” என்று தெரிவித்தார். மேலும், புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து மட்டும் சுமார் 200 பேருந்துகள் மற்றும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் மக்கள் இந்த இணைப்பு விழாவிற்காக மகாபலிபுரத்தில் திரண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம்.. செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது FIR பதிவு.. வெளியான ஷாக் விவரங்கள்!!
இபிஎஸ் மீது மறைமுகத் தாக்குதல்:
அதிமுகவிலிருந்து விலகியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மீதும், அந்த இயக்கத்தின் மீதும் எங்களுக்கு அளவுகடந்த பற்று உண்டு. என்னுடைய விலகல் கடிதத்தை ஒருமுறைக்கு இருமுறை படித்தால் உங்கள் கண்களிலேயே கண்ணீர் வரும். கட்சியின் தலைமையில் இருக்கக்கூடிய தனிப்பட்ட ஒருவருடைய தவறான முடிவுகளின் ஒரே காரணத்தினால்தான் இன்று மகாபலிபுரம் கடல் போல மக்கள் கூட்டத்தால் நிரம்பியுள்ளது” என்று அதிமுக தலைமை மீது தனது பகிரங்கக் குற்றச்சாட்டையும் வருத்தத்தையும் பதிவு செய்தார்.
தவெகவில் அதிமுகவின் முக்கியப் புள்ளிகள்:
தன்னுடன் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணையும் முக்கியத் தலைவர்களின் பட்டியலையும் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டார். “தற்போது ஒட்டுமொத்த டெல்டா பகுதியே காலியாகக்கூடிய நிலைமை அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்ட அவர், முன்னாள் அமைச்சர்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன், வளர்மதி, உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ. முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் & எம்.எல்.ஏக்கள் உரத்தநாடு சேகர் (தஞ்சாவூர்), சீனிவாசன் (திருச்சி), வைரமுத்து (புதுக்கோட்டை), இளம்பை தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), கே.பி. கந்தன் (சென்னை). எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது மாவட்ட நிர்வாகிகள் அனைவருடனும் கூண்டோடு வந்து தவெகவில் இணைய உள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார். மாற்றத்திற்கான அடித்தளமாக, தவெக தலைவர் விஜய் முன்னிலையில், தலைமை கழக மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் தங்களை மகிழ்ச்சியுடன் இணைத்துக் கொள்வதாகக் கூறினார்.
200-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் வருகை:
இந்த மெகா இணைப்பு விழாவிற்காக, முன்னாள் அமைச்சர்களின் சொந்த தொகுதியான விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மாமல்லபுரத்திற்கு அணிவகுத்து வந்த வண்ணம் உள்ளனர். சுமார் 10,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் தவெக-வில் தங்களை இணைத்துக் கொள்ள பேருந்துகள் மூலம் மாமல்லபுரம் பகுதிக்கு வருகை தந்துள்ளனர்.
உற்சாக வரவேற்பும் ஏற்பாடுகளும்:
இணைப்பு விழாவிற்கான விரிவான ஏற்பாடுகள் நேற்று இரவே முழுமையாக நிறைவடைந்துள்ளன. விழாவில் பங்கேற்க வரும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை வரவேற்கும் விதமாக மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் தவெக தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், வருகை தரும் அனைவருக்கும் காலை மற்றும் மதிய உணவுகள் விழா நடைபெறும் விடுதியிலேயே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: வைகோவிடம் வருத்தம், ப.சிதம்பரத்துடன் ரகசிய ஆலோசனை.. தவெக தோழமைக் கட்சி கூட்டத்தில் முதல்வர் விஜய் அதிரடி!!
புஸ்ஸி ஆனந்த் தலைமையில் விழா:
இந்த பிரம்மாண்ட இணைப்பு விழாவானது தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறுவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த முக்கிய அரசியல் நிகழ்வில் தவெக-வின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் கலந்து கொள்ள இருக்கின்றனர். அதிமுகவின் முக்கிய கோட்டையாகக் கருதப்பட்ட பகுதிகளில் இருந்து இத்தனை மூத்த தலைவர்களும், பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் தவெக நோக்கி திரண்டு வருவது தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.