மாமல்லபுரத்தில் இன்று த.வெ.க.வில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. 15 ஆயிரம் நிர்வாகிகள் பங்கேற்பு
இன்று காலை 10 மணியளவில் நடைபெறும் விழாவில் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ். வளர்மதி, எம்.எஸ்.எம். ஆனந்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளனர். மேலும், 28 ஒன்றியச் செயலாளர்கள், பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
ஜூலை 2, 2026: அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளனர். சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் விழாவில் அமைச்சர்கள் என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் அவர்கள் கட்சியில் இணைகின்றனர்.
அதிமுக உட்கட்சி விவகாரம்:
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் கடுமையான உட்கட்சி கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இதுவரை ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், அவர்களில் நான்கு பேர் ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில், அண்மையில் அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
மேலும் படிக்க: வைகோவிடம் வருத்தம், ப.சிதம்பரத்துடன் ரகசிய ஆலோசனை.. தவெக தோழமைக் கட்சி கூட்டத்தில் முதல்வர் விஜய் அதிரடி!!
நேற்று நடைபெற்ற அதிமுக மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதி வகித்து வந்த கட்சிப் பொறுப்பு பறிக்கப்பட்டது. மேலும், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட சில மூத்த நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதிமுகவில் நீடித்து வரும் உட்கட்சி மோதல் மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக பல்வேறு நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர்.
அதிமுகவில் இருந்து விலகி த.வெ.கவில் இணையும் முன்னாள் அமைச்சர்கள்:
இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் நடைபெறும் விழாவில் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ். வளர்மதி, எம்.எஸ்.எம். ஆனந்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளனர்.
மேலும், 28 ஒன்றியச் செயலாளர்கள், பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 200 பேருந்துகள், 600 கார்கள் மூலம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாமல்லபுரம் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் இருந்து தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.