காதலர் தினம்.. எல்லை மீறினால் கடும் நடவடிக்கை.. காதலர்களுக்கு போலீசார் எச்சரிக்கை!!
valentine's day celebration in chennai: இதையொட்டி, சென்னையில் காதலர்கள் அதிகம் கூடும் இடங்களைக் கண்டறிந்து, அங்கு மோதல்கள் அல்லது அநாகரீகச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கக் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் இன்று காலை முதலே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை, பிப்ரவரி 14: காதலர் தினமான (Valentine’s Day) இன்று பொது இடங்களில் எல்லை மீறும் காதல் ஜோடிகள் மீது நடவடிக்கை பாயும் என சென்னை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தினமும் காதலை வெளிப்படுத்தும் காதலர்கள் இந்த நாளை ‘ஸ்பெஷல்’ தினமாகக் கருதுகிறார்கள். எனவே அவர்கள் மெரினா, எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, செம்மொழி பூங்கா, ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் என சென்னையின் அனைத்து முக்கிய இடங்களிலும் இன்றைய தினம் அதிகளவில் காதலர்கள் ஒன்று கூடி, தங்களது காதலை வெளிப்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபடுவர்.
Valentine’s Day: பார்ட்னருடன் காதலை வலுப்படுத்த.. காதலர் தினத்தில் இப்படி சர்ப்ரைஸ் பண்ணுங்க!
காதலர் தின எதிர்ப்பாளர்கள்:
காதல் புனிதமானது என்பது காதலர்களின் வாதமாக இருந்தாலும், இது தமிழகத்தின் பண்பாடு, கலாசாரத்திற்கு எதிரானது என்ற அமைப்புகள் சில அமைப்புகள் கோஷமாக கூறுகின்றன. மேலும் காதல் தினக் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவ்வாறு, கடந்த சில ஆண்டுகளாக காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சில அமைப்புகள் காதல் ஜோடிகளை தொடர்ந்து மிரட்டி, துன்புறுத்தி வரும் சம்பவங்களும் ஆங்காகங்கே நடந்து வருகின்றன. இதுமட்டுமல்லாமல் கழுதைக்கும், கழுதைக்கும் திருமணம் செய்து வைப்பது, நாய்க்கும் நாய்க்கும் திருமணம் செய்து வைப்பது போன்ற செயல்களிலும் ஈடுபடுவது வழக்கம்.
போலீசார் கடும் எச்சரிக்கை:
இது போன்று காதலர்களை துன்புறுத்தும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும், பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் காதல் ஜோடிகள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, காதலர்கள் தனிமையில் இருப்பதை ரகசியமாகப் படம் எடுப்பது அல்லது அவர்களை வீடியோ எடுத்து மிரட்டுபவர்களைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு:
இதையொட்டி, சென்னையில் காதலர்கள் அதிகம் கூடும் இடங்களைக் கண்டறிந்து, அங்கு மோதல்கள் அல்லது அநாகரீகச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கக் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் இன்று காலை முதலே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூட்டத்தைக் கண்காணிக்க ட்ரோன் (Drone) கேமராக்கள் மற்றும் கடற்கரை மணலில் செல்லக்கூடிய அனைத்து நிலப்பரப்பு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதோடு, கடற்கரை மணல் பரப்பில் குதிரைப்படை போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பார்கள்.
மேலும் படிக்க: காதலை போற்றும் காதலர் தினம்.. எப்படி உருவானது..? இதன் வரலாறு என்ன?
சீருடை அணியாத போலீசார் கண்காணிப்பு:
மது விருந்து மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தும் நட்சத்திர விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்குப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. கலைஞர் பூங்கா, செம்மொழிப் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களில் சீருடை அணியாத போலீசார் மறைமுகக் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். அந்தவகையில், இன்றைய தினம் 5,000 போலீசார் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.