Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

TVK Vijay: விஜய் வீட்டில் நுழைந்த மர்ம நபர்.. ஷாக்கான காவலர்கள்… நடந்தது என்ன?

நீலாங்கரையில் உள்ள தமிழ்நாடு வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞர் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகத்தைச் சேர்ந்த அருண் என்கிற அந்த இளைஞர், மொட்டை மாடியில் அமர்ந்திருந்ததை பாதுகாவலர்கள் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

TVK Vijay: விஜய் வீட்டில் நுழைந்த மர்ம நபர்.. ஷாக்கான காவலர்கள்… நடந்தது என்ன?
விஜய்யின் நீலாங்கரை வீடு
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 19 Sep 2025 07:09 AM IST

செங்கல்பட்டு, செப்டம்பர் 19: செங்கல்பட்டு மாவட்டம் நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் வீட்டுக்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்து மொட்டை மாடியில் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் விஜய். இவர் 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்கவுள்ள நிலையில் விஜய் மாவட்டந்தோறும் வார இறுதி நாட்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்படியான நிலையில் விஜய்யின் வீடு நீலாங்கரையிலும், கட்சி அலுவலகம் பனையூரிலும் உள்ளது.

உள்ளே புகுந்த மர்ம நபர்

இப்படியான நிலையில் நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டிற்குள் நேற்று (செப்டம்பர் 18) மாலையில் இளைஞர் ஒருவர் நுழைந்து மொட்டை மாடிக்கு சென்று அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது ஏதேச்சையாக சிசிடிவி காட்சிகளை பார்த்த பாதுகாவலர்கள் மாடியில் யாரோ இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் அந்த இளைஞரை பிடித்து நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Also Read:  ‘கீழே இறங்குப்பா’.. திடீரென டென்ஷனான விஜய்

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் மதுராந்தகத்தைச் சேர்ந்த 24 வயதான அருண் என்பதும், கடந்த நான்கு ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதும் தெரிய வந்தது. மேலும் தற்போது வேளச்சேரியில் உள்ள தனது சித்தி வீட்டில் வசித்து வருவதாக அருண் தெரிவித்துள்ளார்.  இதனைத் தொடர்ந்து அவரை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சேர்த்த காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுவர் ஏறி குதித்தது எப்படி?

இந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபர் எப்படி விஜய் வீட்டிற்கு சென்றார்? அவரை அழைத்து வந்தது யார்? என்ற ரீதியில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் விஜயின் நீலாங்கரை வீட்டின் வாசற் கதவு சுமார் 12 அடி உயரமும், சுவர் 10 அடி உயரமும் கொண்ட நிலையில் அந்த நபர் எப்படி உள்ளே சென்றிருப்பார் என புரியாமல் காவல்துறையினரும், வீட்டு காவலர்களும் குழம்பிப் போயுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் விஜய்க்கு மத்திய அரசின் ஒய் பிரிவு காவலும் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Also Read:  திருச்சி என்றாலே திருப்புமுனைதான் – தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்..

விஜய்யின் நீலாங்கரை வீடு, பனையூர் அலுவலகத்திற்கு தினசரி ரசிகர்கள், தொண்டர்கள் வருகை தந்து வாசலில் நின்று புகைப்படம் எடுத்து செல்வது வழக்கம் என்ற நிலையில் இப்படி ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.