Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திமுக கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது? திருச்சி பரப்புரையில் விஜய் சரமாரி கேள்வி..

TVK Leader Vijay Speech: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சியில் தனது பரப்புரையின் போது, “ 2021 சட்டசபை தேர்தலில் 505 வாக்குறுதிகளை கொடுத்த திராவிட முன்னேற்றக் கழகம், அதில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது?” என சரமாரி கேள்விகளை முன்வைத்தார்.

திமுக கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது? திருச்சி பரப்புரையில் விஜய் சரமாரி கேள்வி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 13 Sep 2025 16:14 PM IST

திருச்சி, செப்டம்பர் 13, 2025: தமிழகத்தில் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சித்து தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், தனது பிரச்சாரத்தில் உரையாற்றினார். திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா என்ற கேள்விகளையும் அவர் எழுப்பினார். அதேபோல், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிப்பீர்களா என கேட்டபோது, அங்கு கூடியிருந்த தொண்டர்கள் “மாட்டோம் ” என சத்தமிட்டனர்.

2026 தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக்கழகத்தைப் பொறுத்தவரையில், அதன் முதல் தேர்தலை சந்திக்க உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் நடைபெற இன்னும் ஏழு மாதங்கள் இருக்கும் நிலையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் செப்டம்பர் 13, 2025 அன்று முதல் தனது பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். டிசம்பர் 20, 2025 வரை, ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மாவட்டம் தோறும் சென்று மக்களைச் சந்தித்து, பிரச்சார உரையாற்ற இருக்கிறார். முதல் நாளான செப்டம்பர் 13, 2025 அன்று திருச்சிக்கு விஜயம் செய்து மக்களைச் சந்தித்தார்.

மேலும் படிக்க: திருச்சி என்றாலே திருப்புமுனைதான் – தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்..

திருச்சியில் பிரச்சாரம்:

காலை 10.30 மணிக்கு நடைபெற இருந்த தேர்தல் பரப்புரையாடல் சுமார் 5 மணி நேரம் தாமதமானது. திருச்சி விமான நிலையத்திலேயே தொண்டர்கள் பிரச்சார வாகனத்தைச் சூழ்ந்தனர். மக்கள் வெள்ளத்தில், தலைவர் விஜயின் வாகனம் எறும்பைப் போல மெதுவாக நகர்ந்தது. பின்னர் மரக்கடை பகுதியை அடைந்தவுடன், மக்கள் ஆரவாரத்துடன் “தவெக” என்ற கோஷங்களை எழுப்பினர். அதன் பின், பிரச்சார வாகனத்தில் இருந்து மேலே வந்த தலைவர் விஜய், ஆளும் திமுக அரசை விமர்சித்து உரையாற்றினார்.

மேலும் படிக்க: எந்தக் கொம்பனாலும் திமுகவை அசைக்க முடியாது – முதலமைச்சர் ஸ்டாலின்!

திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதா?


அப்போது பேசிய அவர், “2026 சட்டசபை தேர்தல் நிச்சயமாக ஒரு திருப்புமுனையாக இருக்கும். 2021 சட்டசபை தேர்தலில் 505 வாக்குறுதிகளை கொடுத்த திராவிட முன்னேற்றக் கழகம், அதில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது? டீசல் விலை ரூ. 3 குறைப்பு, மாணவர்கள் கல்விக் கடன் ரத்து, அரசு வேலைகள், பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், அரசு பணியில் 2 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவது – திமுக கூறியது செய்ததா? இப்படியே நாம் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான். திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை.

திமுகவினருக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது. பஸ்களில் பெண்களை இலவசமாக அனுமதித்துவிட்டு, ‘ஓசி, ஓசி’ என சொல்லிக் காட்டுகிறார்கள். எல்லோருக்கும் ரூபாய் ஆயிரம் தருவதில்லை; கொடுத்த சிலருக்கே சொல்லிக் காட்டுகிறார்கள்.

பெண்கள் பாதுகாப்பில் சமரசம் இல்லை – விஜய்:

கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை தமிழக வெற்றிக்கழகம் செய்து தரும். பெண்கள் பாதுகாப்பிலும் சட்ட பிரச்சனைகளிலும் சமரசம் கிடையாது. நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் செய்வோம்; அதையே நாங்கள் சொல்வோம். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி, வணக்கம்.”* இவ்வாறு தனது உரையை சுருக்கமாக முடித்தார்.