Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எந்தக் கொம்பனாலும் திமுகவை அசைக்க முடியாது – முதலமைச்சர் ஸ்டாலின்!

DMK Mupperum Vizha 2025: திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75வது ஆண்டு முப்பெரும் விழா 2025 செப்டம்பர் 17 அன்று கரூரில் நடைபெறுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்விழாவின் முக்கியத்துவம், விழாவில் வழங்கப்படும் விருதுகள் ஆகியவை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

எந்தக் கொம்பனாலும் திமுகவை அசைக்க முடியாது – முதலமைச்சர் ஸ்டாலின்!
முதலமைச்சர் ஸ்டாலின்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 13 Sep 2025 12:06 PM IST

தமிழ்நாடு, செப்டம்பர் 13: திராவிட முன்னேற்ற கழகத்தின் முப்பெரும் விழாவை முன்னிட்டு அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள், தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்தநாள், பெரியாரின் இலட்சியங்களை வென்றெடுத்திட அண்ணாவால் நம் இதயத்துடிப்பான திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாள், இந்த மூன்றும் நிகழ்ந்தது செப்டம்பர் மாதம் என்பதால் முப்பெரும் விழாவாக, உடன்பிறப்புகளின் திருவிழாவாகக் கொண்டாடும் வழக்கம் உள்ளது. இதனை தொடங்கி வைத்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். முப்பெரும் விழாவை கொள்கை முழக்கமிடும் கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள், கவியரங்குகள், பொதுக்கூட்டம் என முன்னெடுத்து பெரியார், அண்ணா, பாவேந்தர் , கலைஞர் பெயர்களில் கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கும் வழக்கமும் உள்ளது.

தொண்டர்களுக்கு முதலமைச்சர் கடிதம்

கழகத்தின் தலைமைச் செயலகமாகத் திகழும் அண்ணா அறிவாலயம் 1987-ஆம் ஆண்டு நடைபெற்ற முப்பெரும் விழாவின்போதுதான் திறக்கப்பட்டது. முப்பெரும் விழா என்பது நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ளும் திருவிழாவாகும். 75 ஆண்டுகாலக் கழகத்தின் வரலாற்றுத் தடத்தைப் பெருமிதத்துடன் திரும்பிப் பார்த்து, உன்னத இலட்சியப் பயணத்தைத் தொய்வின்றித் தொடர்வதற்கான பாசறையாக திகழ்கிறது. பழைய எதிரிகள், புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கொள்கை உறுதிமிக்க எஃகுக் கோட்டையைத் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று சூளூரைக்கும் நாளாகும்.

கலைஞரை மறைவுக்குப் பின் கழகத்தின் தலைமைப் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டது நாள் முதலே ஒவ்வொரு ஆண்டும் சென்னைக்கு வெளியே ஏதேனும் ஒரு மாவட்டத்தில் முப்பெரும் விழாவைக் கொண்டாடி வருகிறோம். அந்த வகையில், இந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று கரூர் மாநகரின் புறவழிச்சாலையில் அமைந்துள்ள கோடாங்கிப்பட்டி எனும் இடத்தில் முப்பெரும் விழா எனும் கொள்கைத் திருவிழா நடைபெற இருக்கிறது.

கரூர் மாவட்டக் கழகச் செயலாளர், மேற்கு மண்டலக் கழகப் பொறுப்பாளர் செந்தில்பாலாஜி இரவும் பகலும் ஓய்வின்றி விழா ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். செப்டம்பர் 17 மாலை 5 மணியளவில் தொடங்கும் முப்பெரும் விழாவுக்கு அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தலைமை தாங்குகிறார். டி.ஆர்.பாலு எம்.பி, கழக அமைச்சர் கே.என்.நேரு, கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். இந்த விழாவில் பெரியார் விருது அன்புத் தங்கை கவிஞர் கனிமொழி எம்.பி.,க்கு வழங்கப்படவிருக்கிறது. அண்ணா விருது பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் சுப.சீதாராமன், கலைஞர் விருது கழகத்தின் நூறு வயது தொண்டர் அண்ணாநகர் பகுதி முன்னாள் செயலாளர், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் சோ.மா.இராமச்சந்திரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. கரூரில் செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெறவிருக்கும் முப்பெரும் விழாவில் அலைகடலென ஆர்ப்பரித்து உடன்பிறப்புகளாகிய நீங்கள் கூடுவீர்கள் என்பதும், உங்கள் முகம் கண்டு நான் உற்சாகம் பெறுவேன் என்பதும் உறுதியாகியுள்ளது” என தெரிவித்துள்ளார்.