’ உங்க விஜய்.. நா வரேன்’ – தமிழக வெற்றிக் கழக பிரச்சார இலட்சினை வெளியீடு..
TVK Election Badge: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் செப்டம்பர் 13, 2025 தேதியான நாளை முதல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் நிலையில், அக்கட்சி தரப்பில் பிரச்சார இலட்சினை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதில் உங்க விஜய் நா வரேன் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

சென்னை, செப்டம்பர் 12, 2025: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை, அதாவது செப்டம்பர் 13, 2025 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான பிரச்சார இலட்சினை வெளியிடப்பட்டுள்ளது. “உங்க விஜய், நான் வரேன் – வரலாறு திரும்புகிறது” என்ற வாசகத்துடன் இலட்சினை வெளியிடப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் என்று நான்கு முனை போட்டி நிலை உருவாகியுள்ளது. வெற்றி கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது.
த.வெ.க மாநாடு:
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு 2024 ஆம் ஆண்டு விக்கிரவாண்டியில் உள்ள வீசாலையில் நடைபெற்றது. கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. கட்சி தொடங்கியதிலிருந்து இன்று வரை, அதன் தலைவர் விஜய் தொடர்ந்து “அரசியல் எதிரி – பாஜக, கொள்கை எதிரி – திமுக” என்று குறிப்பிட்டு வருகிறார்.
த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரம்:
இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை, செப்டம்பர் 13, 2025 முதல் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தனது பிரச்சாரத்தை திருச்சியில் இருந்து தொடங்குகிறார். அங்கு டிவிஎஸ் டோல்கேட், தலைமை அஞ்சலகம், ரவுண்டானா, பாலக்கரை ரவுண்டானா, மரக்கடை பூலிட்டுப் பகுதிகளில் பரப்புரையாற்றுகிறார்.
விதிக்கப்பட்ட 23 நிபந்தனைகள்:
இதற்காக திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருச்சியில் பிரச்சாரம் நடைபெறுவதற்காக காவல்துறை தரப்பில் விஜய்க்கு 23 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. வாகனத்தில் அமர்ந்துதான் விஜய் செல்ல வேண்டும். சாலவலம் மேற்கொள்ளக்கூடாது. பிரச்சாரம் நிறைவு பெறும் மரக்கடை பகுதியில் 20 முதல் 30 நிமிடம் வரை மட்டுமே விஜய் பேசலாம்.பிரச்சாரம் நடைபெறும் இடத்தில் பட்டாசு வெடிக்கக்கூடாது. மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸ் வசதி கட்டாயம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
தயார் நிலையில் பிரச்சார வாகனம்:
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரச்சார வாகனம் தயார் நிலையில் உள்ளது. அந்த வாகனம், தமிழக வெற்றி கழகத்தின் கொடி வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனத்தின் முழுவதும் பெருந்தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
பிரச்சார இலட்சினை வெளியீடு:
“வாகை சூடும்” வரலாறு திரும்புகிறது #உங்கவிஜய்_நா_வரேன் pic.twitter.com/OlsU55Fpby
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) September 12, 2025
இத்தகைய சூழலில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் தொடங்கும் நிலையில், பிரச்சார இலட்சினை அக்கட்சி வெளியிட்டுள்ளது. அதில் “உங்க விஜய், நான் வரேன் – வரலாறு திரும்புகிறது” என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில், அரசியல் களத்தில் அந்தக் கட்சி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.