சென்னை ஆவடியில் ஈ.பி பெட்டியிலிருந்து 17 பியூஸ் கேரியர்களை திருடிய நூதன சம்பவம்.. இரண்டு பேர் கைது..
புகாரின் பேரில் விசாரணை தொடங்கிய காவல்துறையினர், அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் மற்றும் வினோத்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருடப்பட்ட 17 பியூஸ் கேரியர்களையும் செங்குன்றம் அருகே சுமார் ரூ.1,500க்கு விற்பனை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஜூன் 9, 2026: ஆவடியில் மின்வாரிய பெட்டிகளில் இருந்து கிட்டத்தட்ட 17 பியூஸ் கேரியர்களை திருடிச் சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தினசரி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நீண்ட நேர மின்தடை ஏற்பட்டுவருவதால், பல இடங்களில் பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதும், மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிடுவதும், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மின்வெட்டு தொடர்பாக பேசிய ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன், “மின்வெட்டு ஏற்படுவது உண்மைதான். ஆனால், அது விரைவில் சரிசெய்யப்படும்” என தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், நேற்று சென்னை மடிப்பாக்கம், ஆவடி, மாங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
பியூஸ் கேரியர்களை திருடிய நூதன சம்பவம்:
ஆவடி காமராஜ் நகரில் பல்வேறு இடங்களில் உள்ள HRC பியூஸ்கள் திருடப்பட்டதால், அப்பகுதியில் மீண்டும் மீண்டும் மின்தடை ஏற்பட்டது.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி (CCTV) காட்சிகள் பதிவாகியுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரியத்தின் (TNEB) உதவி பொறியாளர் (AE) நேற்று… pic.twitter.com/raeoCLaYiF
— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) June 9, 2026
இதற்கிடையில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தின் பின்புறத்தில் அமைந்திருந்த மின்சார கேபிள் பெட்டிகளில் இருந்து 14 பியூஸ் கேரியர்களை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, மின்வாரிய அதிகாரிகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் விசாரணை தொடங்கிய காவல்துறையினர், அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் மற்றும் வினோத்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருடப்பட்ட 17 பியூஸ் கேரியர்களையும் செங்குன்றம் அருகே சுமார் ரூ.1,500க்கு விற்பனை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மேலும் படிக்க: புதுவையில் 3 புதிய அமைச்சர்கள்.. இரவோடு இரவாக ஒப்புதல் அளித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு..
மேலும் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட இருவரும் வாகன திருட்டு, இரும்பு திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
போலீஸ் விசாரணையில் வெளிவந்த உண்மை:
இந்த திருட்டு சம்பவத்தால் அந்த பகுதியில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதேபோல், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகேயும் மேலும் 3 பியூஸ் கேரியர்கள் திருடப்பட்டதாக கூடுதல் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் தொடர்ந்து மின்வெட்டு பிரச்சினை நிலவி வரும் சூழலில், இதுபோன்ற மின்வாரிய உபகரண திருட்டு சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.