மேற்கு வங்கத்தில் தவெக அலுவலகம் திறக்கப்பட்டது உண்மையா? தவெக அளித்த விளக்கம்
TVK Bengal Office Clarification : மேற்கு வங்கத்தில் தவெக உறுப்பினர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட சிலர் அங்கு தவெக கட்சி அலுவலகத்தை திறந்தனர். இது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. இந்த நிலையில் இதற்கு தவெக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செப்டம்பர் 30 : தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தைத் தாண்டி பிற மாநிலங்களிலும் கட்சியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு பகுதியாக கேரளாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் கிளையை தொடங்கவுள்ளதாக கூறப்பட்டது. இதற்கிடையில் தற்போது மேற்கு வங்கத்தில் தவெக உறுப்பினர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட சிலர் அங்கு தவெக கட்சி அலுவலகத்தை திறந்தனர். இது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியது.
மேற்கு வங்கத்தில் தவெக அலுவலகம் திறக்கப்பட்டது உண்மையா?
இந்த நிலையில் இதற்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தவெக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான சங்கவி டயானா விளக்கமளித்துள்ளார். மேலும் பேசிய அவர், மேற்கு வங்கத்தில் தவெக அதிகாரப்பூர்வமாக எந்த அலுவலகத்தையோ கிளையையோ தொடங்கவில்லை. அந்த முயற்சிக்கு தமிழகத்தில் உள்ள கட்சியின் மத்தியத் தலைமையிடமிருந்து எந்த அனுமதியோ, ஆதரவோ வழக்கப்படவில்லை. தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய்யின் தலைமையால் ஈர்க்கப்பட்வர்கள் தன்னிச்சையாக எடுத்த முயற்சியாக இது இருக்கலாம் என்றார்.
இதையும் படிக்க : அன்பில் மகேஸ் கூட்டாளி இடங்களில் சிசிபி திடீர் சோதனை.. 44 ஆவணங்கள்- மடிக்கணினி பறிமுதல்.. விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை!
மேற்கு வங்கத்தின் புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள ஃபாகுபூரில், கடந்த செப்டம்பர் 27, 2026 ஞாயிற்றுக்கிழமை தவெக உறுப்பினர்கள் எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட சிலர், தவெக அலுவலகத்தை திறந்தனர். மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஆதரவாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இந்த செய்தி வெளியானதில் இருந்து மேற்கு வங்கத்திலும் தவெக விரிவுபடுத்தப்படவிருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் தவெகவின் மாநில ஒருங்கிணைப்பாளர் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட சைதாலி ராய் என்பவர் மேற்கு வங்கத்தில் தற்போது சுமார் 5,000 தவெக ஆதரவாளர்கள் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும்தமிழகத்திலிருந்து வந்த அறிவுறுத்தலின் பேரில்தான் இந்த அலுவலகம் திறக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், இந்த அமைப்பை அரசியலை விட சமூக பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அவரிடம் விஜய் மேற்கு வங்கத்துக்கு வருவாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் முதல்வர் விஜய் தற்போது இடைத்தேர்தல் பணிகளில் மும்முரமாக இருக்கிறார். இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தமிழக முதல்வர் விஜய் மேற்கு வங்கத்துக்கு நிச்சயம் இங்கு வருவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிக்க : மாரியப்பனின் ஷூ முதல் தஞ்சை வீணை வரை – பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள் ஏலம்
தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளிலும் வருகிற அக்டோபர் 6, 2026 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தொகுதிகளின் அதிமுக எம்எல்ஏக்களாக இருந்த மரகதம் குமாரவேல், சத்யபாமா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்தனர். இதன் காரணமாக இந்த இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.