தமிழக வெற்றி கழக அரசின் முதல் பட்ஜெட்.. வெளியாகும் முக்கிய அறிவிப்புகள் என்ன? எகிறும் எதிர்ப்பார்ப்பு..
தமிழக பட்ஜெட்டில், மாணவர்கள் உருவாக்கும் செயற்கைக்கோள் திட்டங்களுக்கு தமிழக அரசு நிதியுதவி வழங்கும் திட்டமும் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதேபோல் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்துவது தொடர்பான அறிவிப்பும் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 3, 2026: தமிழக அரசின் பொது பட்ஜெட் வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், இந்த பட்ஜெட்டின் மீது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக, தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா, மக்களுக்கு தேவையான புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்:
இந்த நிலையில், பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, அரசு பள்ளிகளில் படித்து அரசு கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு ரூ.8,000 வரை உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள 30 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தன்னாட்சி கல்லூரிகளாக மாற்றும் திட்டம் குறித்தும் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், மாணவர்கள் உருவாக்கும் செயற்கைக்கோள் திட்டங்களுக்கு தமிழக அரசு நிதியுதவி வழங்கும் திட்டமும் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்துவது தொடர்பான அறிவிப்பும் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீட் போன்ற நுழைவு தேர்வை ரத்து செய்ய திட்டம்:
தேசிய கல்விக் கொள்கை திணிப்பு, நீட் தேர்வு உள்ளிட்ட கல்வி தொடர்பான தடைகளை நீக்க நடவடிக்கை எடுப்பது, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட அம்சங்களும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க: எடப்பாடி அளித்த பதவிகள் தேவையில்லை.. எஸ்.பி. வேலுமணி திடீர் போர்க்கொடி!
மாணவர்கள் மற்றும் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளும் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.
பொதுமக்களுக்கான அறிவிப்புகள்:
குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை, வேலையில்லா பட்டதாரிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: காஞ்சிபுரம் தொழில் வளர்ச்சி மையத்தில் முதல்வர் ஜோசப் விஜய் ஆய்வு.. அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை!
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் இந்த பட்ஜெட் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.