திருச்சி செவிலியர் மாணவி உயிரிழப்பு… தீவிர விசாரணையில் சிறப்பு குழு.. விரைவில் அறிக்கை தாக்கல்!
Trichy Nursing Student Death: திருச்சி செவிலியர் மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மற்கொள்வதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த குழுவில் யார் யார் இடம் பெற்றுள்ளனர் என்பதை இந்தப்பதிவில் பார்க்கலாம்.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், மணக்குடிபட்டியை சேர்ந்தவர் சேட்டு. விவசாய தொழிலாளியான இவருக்கு சீதாலட்சுமி ( 19 வயது) என்ற மகள் இருந்தார். இவர், திருச்சி கிஆபெ விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் 3- ஆம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தார். இந்த நிலையில், மாணவி சீதாலட்சுமிக்கு மூக்கில் சதை வளர்ந்ததன் காரணமாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி, சீதாலட்சுமி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சம்பவத்தன்று மூக்கில் வளர்ந்துள்ள சதையை அகற்றுவதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக சீதாலட்சுமிக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டது. அப்போது, அவருக்கு அதிக அளவிலான படபடப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.
அதிக மயக்க மருந்து செலுத்தியதால் மாணவி உயிரிழப்பு
இதனால், மயக்க நிலையில் இருந்த மாணவி சீதாலட்சுமி மருத்துவர்கள் மீட்டெடுக்க முயன்றும் பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதில், மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமாக மாணவி சீதாலட்சுமி உயிரிழந்ததாக கூறி அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் சக செவிலிய மாணவிகள் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மாணவி உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக சிறப்பு குழுவை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது.




சிறப்பு விசாரணைக் குழுவில் இடம் பெற்றவர்கள்
அதன்படி, இந்த குழுவில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில், இதே மருத்துவமனையை சேர்ந்த காது, மூக்கு, தொண்டை பிரிவு பேராசிரியர் பாரதி மோகன், மயக்கவியல் பேராசிரியர் சண்முக சுந்தரம், மருத்துவ பேராசிரியர் ஜெயபிரகாஷ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த குழுவானது சென்னையில் இருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மயக்கவியல் மருத்துவர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும், மாணவி சீதாலட்சுமியின் பெற்றோரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாணவி உயிரிழப்பில் உரிய நடவடிக்கை
இதில், கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், விசாரணை குழுவினர் அறிக்கை தயார் செய்து தமிழக அரசிடம் சமர்ப்பிப்பார்கள் என்று தெரிகிறது. இதில், மாணவி உயிரிழப்பில் கவனக்குறைவு இருந்தது தெரிய வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவத்தில் சுமார் 12 மணி நேரம் நடைபெற்ற செவிலியர்கள் போராட்டம் கலெக்டர் பேச்சு வார்த்தையின் அடிப்படையில் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி பலி.. விளக்கம் கேட்ட சக மாணவிகளுக்கு மிரட்டல்.. களத்திற்கு வந்த அமைச்சர்!!