வெளியானது குரூப் 4 தேர்வு அறிவிப்பு – 6,574 காலிப்பணியிடங்கள் – தேர்வு எப்போது?
TNPSC Group 4 : தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள 6,574 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அக்டோபர் 6, 2026 வெளியிட்டது. அதன் படி வருகிற ஜனவரி 10, 2026 அன்று தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, அக்டோபர் 6 : தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள 6,574 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அக்டோபர் 6, 2026 வெளியிட்டது. இந்த நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அக்டோபர் 6, 2026 இன்று முதல் நவம்பர் 5, 2026 அன்று இரவு 11.59 மணி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வு வருகிற ஜனவரி 10, 2027 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியானது குரூப் 4 தேர்வு அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சியின் குரூப் 4 தேர்வு டிசம்பர் 20, 2026 அன்று நடைபெறும் என முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அது ஜனவரி 10, 2027 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 46 வகையான பதவிகளுக்கு மொத்தம் 6,574 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை தற்காலிகமானது என்றும், கலந்தாய்வு தொடங்குவதற்கு முன் மாற்றம் செய்யப்படலாம் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. பதவி வாரியான இடஒதுக்கீட்டுப் பகிர்வுப் பட்டியல் பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : Tamil Nadu Bypoll: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் – வாக்குப்பதிவு இவ்வளவு குறைவா?




எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். முதலில் ஒருமுறைப் பதிவு செய்ய வேண்டும். அதற்கான கட்டணம் ரூ.150. இந்தப் பதிவு ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். ஏற்கெனவே பதிவு செய்தவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம். ஒருமுறைப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக் கட்டணம் ரூ.100. இதை இணைய வங்கி, டெபிட், கிரெடிட் கார்டு அல்லது யுபிஐ மூலம் செலுத்தலாம். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மூன்று முறையும், முன்னாள் ராணுவத்தினருக்கு இரண்டு முறையும் கட்டண விலக்கு உண்டு. ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நாளில் இணையதளம் ஹேங் ஆக வாய்ப்புள்ளதால், முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் வயது வரம்பு 01.07.2026 தேதியின் அடிப்படையில் கணக்கிடப்படும். பதவி மற்றும் வகுப்புப் பிரிவுக்கு ஏற்ப உச்ச வயது வரம்பும் வயது வரம்புச் சலுகையும் மாறுபடும். விண்ணப்பதாரர்கள் அறிவிக்கையில் உள்ள அட்டவணையைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இதர பிரிவைச் சேர்ந்தவர்கள் மத்திய, மாநில அரசுப் பணியில் ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றியிருந்தால், வயது வரம்புக்குள் இருந்தாலும் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : Tamilnadu Puducherry By Poll : தமிழகம்- புதுச்சேரி இடைத்தேர்தல்.. விருவிருப்பாக நடந்த வாக்குப்பதிவு நிறைவு.. இயந்திரங்களுக்கு “சீல்”
கல்வித் தகுதியும் பதவிக்குப் பதவி வேறுபடும். தட்டச்சர், சுருக்கெழுத்துத் தட்டச்சர் பதவிகளுக்குத் தொழில்நுட்பத் தகுதி தேவை. சில பதவிகளுக்குக் கூட்டுறவு மேலாண்மைப் பட்டயம் போன்ற குறிப்பிட்ட தகுதிகளும் தேவைப்படுகின்றன.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பில் தமிழை ஒரு பாடமாகப் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும். அல்லது டிஎன்பிஎஸ்சி நடத்தும் இரண்டாம் நிலை மொழித் தேர்வில் தமிழில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தச் சான்றுகளைச் சமர்ப்பிக்கத் தவறுபவர்கள், பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளுக்குள் அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இல்லையெனில் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள்.
ஒரே எழுத்துத் தேர்வின் மூலம் தேர்வு நடைபெறும். மொத்தம் 200 வினாக்கள், 300 மதிப்பெண்கள், 3 மணி நேரம் நடைபெறும். தேர்வு ஓஎம்ஆர் முறையில் நடைபெறும். இது இரு பகுதிகளைக் கொண்டது.
முதல் பகுதி தமிழ்த் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு முறையில் நடைபெறும். அதில் 100 வினாக்கள், 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இதில் குறைந்தபட்சம் 40 சதவீதம் அதாவது 60 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பகுதி ஆ விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும். பகுதி ஆ பிரிவில் பொது அறிவு 75 வினாக்கள், திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு 25 வினாக்கள் என மொத்தம் 100 வினாக்கள், 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம் பெறும்.
தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் 90 என தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். விடை தெரியாத வினாக்களுக்கு ஓஎம்ஆர் தாளில் [E] என்ற வட்டத்தை நிரப்ப வேண்டும் என்பதும் விதிமுறைகளில் இடம்பெற்றுள்ளது.