AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tiruvallur: வங்கியை பூட்டாமல் சென்ற ஊழியர்கள்.. ஆவடியில் காத்திருந்த அதிர்ச்சி!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள எஸ்பிஐ வங்கி, பணியாளர்கள் கவனக்குறைவால் இரவு முழுவதும் திறந்து கிடந்தது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காவலர் ரோந்துப் பணியின் போது இதனைக் கண்டுபிடித்ததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. வங்கியில் லட்சக்கணக்கான ரூபாய் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

Tiruvallur: வங்கியை பூட்டாமல் சென்ற ஊழியர்கள்.. ஆவடியில் காத்திருந்த அதிர்ச்சி!
பூட்டப்படாமல் இருந்த வங்கி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 06 Jun 2025 19:24 PM IST

திருவள்ளூர், ஜூன் 6: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே பணி நேரம் முடிந்து ஊழியர்கள் வங்கியை பூட்டாமல் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் அரசு மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. பணம், நகை உள்ளிட்ட பொருள்கள் வங்கியில் உள்ள லாக்கரில் இருப்பதால் அனைத்து கிளைகளிலும் 24 மணி நேரமும் பாதுகாப்பானது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அதையும் மீறி சில இடங்களில் வங்கி கொள்ளைகளும் அரங்கேறி வருகிறது. என்னதான் அனைத்து வங்கிகளிலும் சிசிடிவி கேமராக்கள், சரியான பாதுகாப்பு இருந்தாலும் அதனையும் மீறி குற்ற சம்பவங்கள் நடந்து விடுகிறது. ஆனால் அத்தகைய குற்ற சம்பவத்திற்கு வழிவிடும் வகையில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் நடைபெற்ற சம்பவம் பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

திறந்திருந்த வங்கி

ஆவடி செக்போஸ்ட் அருகே அரசு பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுவது வழக்கம். இப்படியான நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு மணி சமயத்த்தில் ஆவடி காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி காவல் ஆய்வாளரான சிவக்குமார் அங்கிருக்கும் சிடிஎச் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது குறிப்பிட்ட அந்த வங்கி கிளையை வண்டி கடந்த போது வாசலில் ஏதோ ஒன்று வித்தியாசமாக இருப்பதை பார்த்துள்ளார். என்னவாக இருக்கும் என மீண்டும் எஸ்பிஐ வங்கி கிளைக்கு சென்று வாசலில் பார்த்தபோது வங்கி பூட்டப்படாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பொதுவாக வங்கியில் வாசல் பகுதியில் ஒரு இரும்பு கிரில் கேட் மற்றும் மரக்கதவு ஆகியவை அமைக்கப்பட்டிருக்கும். இவை இரண்டுமே பூட்டப்படாமல் இருந்ததை கண்டு உடனடியாக வங்கியின் மேலாளர் பூபாலனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

காவல் அதிகாரிக்கு குவியும் பாராட்டு

உடனடியாக அவரும் கடைநிலை ஊழியருமான சுரேந்தரும் சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு உடனடியாக வந்துள்ளனர். அங்கிருந்த பணம், நகை உள்ளிட்டு அனைத்தையும் ஆய்வு செய்த நிலையில் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை என தெரிய வந்ததையடுத்து நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நேற்று முன் தினம் இரவு 7.30 மணி வரை ஊழியர்கள் இருந்ததாகவும், கவன குறைவால் வங்கியின் கதவை பூட்டாமல் சென்று விட்டதும் தெரியவந்தது.

இந்த எஸ்பிஐ வங்கி கிளையில் சுமார் 3,000-க்கும் மேற்பட்டோர் வங்கி கணக்கு வைத்துள்ளனர்.அது மட்டுமல்லாமல் ரூபாய் 50 லட்சம் வரை இருப்பு தொகை இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. உரிய நேரத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டதால் வங்கியில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் திருடு போகாமல் தப்பியதாக காவல் உதவி ஆய்வாளர் சிவகுமாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் இந்த வங்கிக்கு முழு நேர காவலாளியை நியமிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட காவல் ஆணையர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.  அதே சமயம் காவல் அதிகாரி சிவக்குமாரையும் வெகுவாக பாராட்டினார்.

Follow Us