Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அதிகரிக்கும் கூட்டம்.. திருப்பதி போல தமிழக கோயில்களில் ஆன்லைன் முன்பதிவு!

Online Booking Darshan: தமிழ்நாட்டின் முக்கிய கோயில்களான திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், ஆன்லைன் முன்பதிவு முறை அமலுக்கு வரவுள்ளது. இதனால், நீண்ட நேர காத்திருப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை விரைவில் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் கூட்டம்.. திருப்பதி போல தமிழக கோயில்களில் ஆன்லைன் முன்பதிவு!
அமைச்சர் சேகர் பாபு
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 05 Jun 2025 19:30 PM

தமிழ்நாடு, ஜூன் 5: தமிழகத்தின் மிக முக்கிய கோயில்களில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க விரைவில் முன்பதிவு செய்து தரிசனம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு (Minister Sekar Babu) தெரிவித்துள்ளார். குறிப்பாக திருவண்ணாமலை (Tiruvannamalai), திருச்செந்தூர் (Tiruchendur Murugan temple) , பழனி ஆகிய முக்கிய கோயில்களில் தினமும் உள்ளூர், வெளியூர், வெளிமாநில பக்தர்கள் அதிகளவில் வருகை தருகிறார். நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகிறார்கள். சில நேரங்களில் வரிசையில் நிற்கும் பக்தர்களிடையே மோதல் ஏற்படும் சூழலும் நிலவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் கைக்குழந்தைகள், வயதான முதியவர்களும் சாமி தரிசனம் செய்ய வருகை தரும் நிலையில் மிகுந்த சிரமம் ஏற்படும் சூழலும் உண்டாகிறது.

விரைவில் ஆன்லைன் முன்பதிவு

இப்படியான நிலையில் திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி ஆகிய முக்கிய கோயில்களில் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்யும் முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருவதாகவும் விரைவில் முதலமைச்சர் ஸ்டாலின் இதனை தொடங்கி வைப்பார் எனவும் அவர் கூறியுள்ளார். அமைச்சர் சேகர்பாபுவின் இந்த அறிவிப்பு ஆன்மிக அன்பர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்பதிவு மூலம் வெளியூரில் இருந்து வருபவர்கள் தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ள முடியும். உள்ளூர் பக்தர்களும் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய முடியும் என கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஜூலை மாதத்தில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள திருச்செந்தூரில் முன்னேற்பாடு பணிகள் நிறைவடைந்து முன்பதிவு முறை இல்லாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருப்பதி போன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூண்டு முறை வழியே சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

3000வது கும்பாபிஷேக விழா

இதனிடையே தமிழ்நாட்டில் திமுக ஆட்சி 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்றது தொடங்கி இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பல்வேறு கோயில்களிலும் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோயில் கொண்டிருக்கும் திருப்புகளூர் அக்னிபுரீஸ்வரர் ஆலயம் கும்பாபிஷேகம் காணும் 3000 வது கோயில் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேக விழா இன்று (ஜூன் 5 2025) சிறப்பாக நடைபெற்ற முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.