Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Free Boiled Milk Scheme: கோயில்களில் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் திட்டம்.. எங்கெங்கு தெரியுமா?

தமிழ்நாடு அரசு, கோயில்களுக்கு வரும் பச்சிளம் குழந்தைகளுக்கு இலவச காய்ச்சிப் பால் வழங்கும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. 10 கோயில்களில் இத்திட்டம் அமலில் உள்ளது. இந்தத் திட்டம் பெற்றோருக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Free Boiled Milk Scheme: கோயில்களில் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் திட்டம்.. எங்கெங்கு தெரியுமா?
அமைச்சர் சேகர்பாபு
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 02 Jun 2025 19:04 PM

தமிழ்நாடு அரசு சார்பில் கோயில்களுக்கு வரும் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டமானது இன்று (ஜூன் 2, 2025) தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் மற்ற கோயில்களிலும் இத்திட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கையின் போது, கோயில்களில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு தினசரி காய்ச்சிய பால் வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருந்தார். அதன்படி இந்த திட்டமானது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று (ஜூன் 2, 2025) காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.  மேலும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிஎன் ஸ்ரீதர் தலைமை வகித்தார்.

பெற்றோர் – குழந்தைகளுக்கு பேருதவி


பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு 10 திருக்கோயில்களில் தினசரி காய்ச்சிய பால் வழங்கப்படும் என தெரிவித்திருந்தோம். அதன்படி தற்போதைய திட்டம் திருச்செந்தூரில் தொடங்கியுள்ளது. இதற்கான செலவு ரூபாய் 50 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டமானது தரிசனத்திற்கு வரிசையில் காத்திருக்கும் பெற்றோருக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும் மிகப்பெரிய உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் திருக்கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் தெரிவித்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தொடர்ந்து பக்தர்களுக்கு இதுபோன்ற நல பணிகளையும் வசதிகளையும் செய்து தருவதற்கு ஒரு ஊக்கமாக இருக்கிறது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

எந்தெந்த கோயில்களில் திட்டம் தொடக்கம்?

இந்த காய்ச்சிய பால் வழங்கும் திட்டமானது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், மருதமலை முருகன் கோயில், பண்ணாரி மாரியம்மன் கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் ஆகிய இடங்களில் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு

இதற்கிடையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் குடமுழுக்கு விழா தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியருடன் சுமார் 4 மணி நேரம் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார். உயிரில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள், கும்பாபிஷேகத்தின் போது பக்தர்களுக்கு செய்து தர வேண்டிய வசதிகள் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூலை 7ஆம் தேதி திருச்செந்தூர் கோயிலின் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதால் அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.. அதற்கேற்றார் போல் உணவு, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மருத்துவ வசதி குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி நடத்தி உள்ளோம் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்