AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Rameswaram: ஜூன் 4ல் ராமேஸ்வரம் செல்ல திட்டமா?.. கோயில் நடை 10 மணி நேரம் அடைப்பு!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் நடை ஜூன் 4, 2025 அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 10 மணி நேரம் அடைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமலிங்க பிரதிஷ்டை விழாவின் ஒரு பகுதியாக இந்த நடை அடைப்பு செய்யப்படுகிறது. எனவே பக்தர்கள் தங்களின் வருகையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ள கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Rameswaram: ஜூன் 4ல் ராமேஸ்வரம் செல்ல திட்டமா?.. கோயில் நடை 10 மணி நேரம் அடைப்பு!
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 02 Jun 2025 15:09 PM IST

உலகப்புகழ் பெற்ற ராமேஸ்வரம் கோயிலின் நடை ஜூன் 4 ஆம் தேதி சில மணி நேரம் அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே பக்தர்கள் தங்கள் திட்டத்தை சரியாக வகுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் தீவுப் பகுதியான ராமேஸ்வரத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாக ராமநாதசுவாமி கோயில் திகழ்கிறது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் கூட ஆன்மீக அன்பர்கள் வருகை தந்து இறைவழிபாடு மேற்கொள்கின்றனர். இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க கோயில்களில் ராமநாதசுவாமி கோயிலும் ஒன்றாகும். வடக்கே காசிக்கு அடுத்தபடியாக பக்தர்கள் கொண்டாடும் புண்ணிய இடமாக ராமேஸ்வரம் உள்ளது. இங்கு முன்னோர் வழிபாடு மேற்கொண்டால் பித்ரு சாபம் நீங்கும் என்பது நம்பிக்கை ஆகும். அதேபோல் கோயிலுக்கு உள்ளே இருக்கும் 22 தீர்த்தங்களில் நீராடி சாமியை வழிபட்டால் பல்வேறு பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமர் வழிபாடு

கோயில் ராமாயணத்துடன் தொடர்புடையது என சொல்லப்படுகிறது.. அதே சமயம் ராவணனை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் ராமேஸ்வரம் எனவும் புராணங்கள் கூறுகிறது. எனவேதான் இங்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள்.

ராமலிங்க பிரதிஷ்டை நிகழ்ச்சி

இக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா மூன்று நாள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி 2025 ஆம் ஆண்டு ராமலிங்க பிரதிஷ்டை விழாவானது ஜூன் 3ம் தேதி தொடங்குகிறது. அன்று கால பூஜை முடிந்த பிறகு ராவண சம்ஹாரமும், ஜூன் 4ம் தேதி பகல் 12 மணிக்கு தனுஷ்கோடி அருகே இருக்கும் கோதண்டராமர் கோயிலில் விபீஷணர் பட்டாபிஷேக வைபவ நிகழ்ச்சியும், ஜூன் 5ஆம் தேதி காலை 8 மணிக்கு இராமலிங்க பிரதிஷ்டை நிகழ்வும் நடைபெற உள்ளது.

10 மணி நேரம் நடை அடைப்பு

இந்த நிகழ்ச்சியின் காரணமாக 2025 ஜூன் 4ம் தேதி அன்று அதிகாலை 2.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு ராமநாத சுவாமி கோவிலில் ஸ்படிக லிங்க பூஜையானது நடத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் மற்றும் ராமர் ஆகியோர் விபீஷணர் பட்டாபிஷேக விழாவிற்காக செல்வார்கள். இதன் காரணமாக அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை  ராமநாத சுவாமி கோவிலின் நடை அடைக்கப்படுவதுடன் ஜூன் 4ம் தேதி ராமேஸ்வரம் கோயிலில் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடவும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் அன்று மாலை 5 மணிக்கு பிறகு கோதண்ட ராமர் கோயிலில் இருந்து சுவாமி, அம்பாள், ராமர் ஆகிய மூன்று பேரும் கோயிலுக்கு திரும்பியதும் நடைதிறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக வழக்கம் போல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் தங்கள் ஆலய வருகையை திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us