AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Vaikasi Visakam: வைகாசி விசாகம் நாளில் விரதம் இருப்பது எப்படி? – இதோ வழிமுறைகள்!

வைகாசி விசாகம் முருகப்பெருமானின் அவதார தினமாகும். இந்நாளில் விரதம் இருந்து முருகனை வழிபடுவது சிறப்பானதாகும். இந்நாளில் உண்ணா நோன்பு அல்லது பால், பழம் உண்டு விரதம் இருக்கலாம். முருகன் மந்திரங்கள், திருப்புகழ் ஆகியவற்றை பாராயணம் செய்வதும், கோயில்களில் வழிபாடு செய்வதும் முக்கியமானதாகும்.

Vaikasi Visakam: வைகாசி விசாகம் நாளில் விரதம் இருப்பது எப்படி? – இதோ வழிமுறைகள்!
முருகப்பெருமான்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 31 May 2025 15:36 PM IST

தமிழ் கடவுள் முருகப்பெருமான் அவதரித்த தினம் வைகாசி விசாகம் என அழைக்கப்படுகிறது. சூரபத்மன் என்னும் அரக்கனை அழிப்பதற்காக சிவபெருமான் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தனது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறியை உருவாக்கினார். அந்த தீப்பொறி ஆறு பகுதிகளாக பிரிந்து கங்கை நதியில் பயணித்து கடைசியில் தென்னிந்தியாவில் இருக்கும் சரவணப் பொய்கை வந்தடைந்தது. அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாறிய நிலையில் அவற்றை வளர்க்கும் பொறுப்பை பார்வதி தேவி கார்த்திகை பெண்களிடம் வழங்கினார். இப்படியாக முருகப்பெருமான் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்ததாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திலும் விசாகம் நட்சத்திரம் வந்தாலும் வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரம் தான் முருகன் பிறந்த தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதேசமயம் பக்தர்களும் விரதம் இருந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் வைகாசி விசாகம் அன்று எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பது பற்றி நாம் காணலாம். வைகாசி விசாகம் 2025 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது.

இதெல்லாம் மறக்காம செய்யுங்க

வைகாசி விசாக நாளில் நாள் முழுவதும் நாம் உண்ணா நோன்பு இருந்து முருகனை வழிபடலாம். சிலருக்கு உடல் நலத்தில் பிரச்சனை இருக்கலாம். இவர்கள் மருத்துவர்களின் உரிய ஆலோசனைப்படி உண்ணா நோன்பு மேற்கொள்ளலாம். இல்லாவிட்டால் பால், பழம் மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். இந்த விரத காலத்தில் முருகப்பெருமானை மனதார நினைத்து அவருடைய மந்திரங்கள், திருப்புகழ், பக்தி பாடல்கள் என எதையாவது ஒன்றை நாம் பாராயணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதால் நமக்கு முருகனின் அருள் நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. கோடைகாலத்தின் முடிவு மற்றும் வசந்த காலத்தின் தொடக்கமாக வரும் வைகாசி மாதத்தில் இந்த விசாகம் வருவது மிகவும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.

விரதம் இருக்கும் வரை

வைகாசி விசாகம் நாளில் அதிகாலையில் இருந்து குளித்து புத்தாடை அணிந்து வீட்டில் உள்ள பூஜை அறையில் முருகப்பெருமானின் புகைப்படத்தை மலர்களால் பூஜித்து, உங்களால் முடிந்த பொருட்களை பிரசாதமாக வைத்து வழிபாடு மேற்கொண்டு விரதத்தை தொடங்கலாம். நேரம் இருக்கும் என நினைப்பவர்கள் காலை, மாலை என இரு வேளையும் அருகில் இருக்கும் முருகன் கோயிலுக்கு சென்று வரலாம். சிலர் வீட்டில் வேல் அல்லது சிலை வைத்து முருகனை வழிபடுவார்கள். அவர்கள் இன்றைய நாளில் பாலாபிஷேகம் செய்வது மிகுந்த நன்மை பயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் முருகன் கோயிலுக்கு பால் அபிஷேகத்திற்கு பால், அபிஷேகங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்தும் புண்ணியம் பெறலாம். மாலையில் வீட்டில் இருக்கும் முருகன் படத்திற்கு முன் நெய் தீபம் ஏற்றி முருகனுக்கு உரிய துதி பாடல்களை பாராயணம் செய்து வழிபடலாம். மேலும் இந்நாளில் பணம் உடை உணவு தேவைப்படும் பொருட்கள் உள்ளிட்டவற்றை தானமாக வழங்கலாம்.

விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்

வைகாசி விசாகம் தினத்தில் விரதம் இருந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என பக்தர்களால் தீர்க்கமாக நம்பப்படுகிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் தீராத பிரச்சனையும் தீரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியிடங்களில் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற செய்திகள் வந்து சேரும். இந்நாளில் எப்படிப்பட்ட துன்பங்கள் இருந்தாலும் விரதம் இருந்து வழிபட்டால் முருகப்பெருமான் அனைத்தையும் தீர்த்து வைப்பார் என்பது ஐதீகமாக உள்ளது.

(ஆன்மிக நம்பிக்கையின்படி இந்த செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் என்றும் பொறுப்பேற்காது)

Follow Us