“நாங்க மாற்றத்தை கொண்டு வருவோம்-னு சொல்றாங்க”.. இதைவிட என்ன மாற்றம் வேணும்?.. ஆ.ராசா பளீர்!
75 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சிந்தனை, ஒரே போக்குடன் இந்தியாவில் ஏதேனும் ஒரு இயக்கம் தொடர்ந்து கம்பீரமாகச் செயலாற்றுகிறது என்றால், அது தந்தை பெரியார் மற்றும் அண்ணாவின் அடையாளத்தைக் கொண்ட திராவிட இயக்கம்தான் என்றும், இந்த அடையாளமே நாடாளுமன்றத்தில் தங்களைச் சிறப்பாக வேறுபடுத்திக் காட்டுகிறது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
சென்னை, ஜுன் 13: நாங்கள் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று புதிய தரப்பினர் கூறி வரும் நிலையில், திராவிட இயக்க மேடைகளில் ஏற்கனவே நிகழ்ந்துள்ள சமூக மாற்றமே உண்மையான மாற்றம் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். திராவிடர் கழகப் பிரமுகர் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், மேடையில் இருந்த பெயர்களைக் குறிப்பிட்டு நகைச்சுவையாகவும், அதே சமயம் அரசியல் ரீதியாகவும் பேசியது அரங்கத்தில் பெரும் சிரிப்பலையையும் கைதட்டலையும் ஏற்படுத்தியது. மணமகன் குடும்பப் பின்னணி மற்றும் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசிய ஆ.ராசா, இந்தத் திருமணம் அண்ணாமலை இல்லத்துத் திருமணம். ஆனால் மணமகளின் பெயர் “தமிழர் தலைவர்” என்று குறிப்பிட்டார். மேலும், தாத்தாவுக்கு அண்ணாமலை என்று ஆன்மீகப் பெயர் இருந்த காலம் மாறி, அவரின் பேரன் இன்றைக்கு ‘தமிழர் தலைவர்’ (திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் அடையாளம்) என்ற பெயரோடு மணமகனாக வீற்றிருக்கிறார்.
மேலும் படிக்க: ‘வீடு லீசுக்கு போறீங்களா?’ சென்னையில் அரங்கேறிய பல லட்ச ரூபாய் நூதன மோசடி.. உஷார் மக்களே!!
இதற்கிடையே இளவழகன் என்ற தந்தை இருந்து, மகனுக்குத் தமிழர் தலைவர் என்று பெயர் சூட்டி, அதற்குத் ‘தமிழர் தலைவரே’ தலைமை தாங்கி இந்தத் திருமணத்தை நடத்துகிறார் என்றால், இதைவிட சமூகத்தில் என்ன பெரிய மாற்றம் வேண்டும்?. “நாங்க மாற்றத்தைக் கொண்டு வரோம், மாற்றத்தைக் கொண்டு வரோம்னு இப்ப ஒரு புது கோஷ்டி கிளம்பிருக்கு. உண்மையான மாற்றம் எது என்பதை இந்த மணமகனும், தமிழர் தலைவரும் நிகழ்த்திக் காட்டியுள்ளனர்” என்று தற்போதைய அரசியல் சூழலை மறைமுகமாக விமர்சித்துப் பேசினார்.
நாணயத்தின் இரு பக்கங்களும்:
திராவிடர் கழகமும் (திக), திராவிட முன்னேற்றக் கழகமும் (திமுக) ‘இரட்டைக்குழல் துப்பாக்கி’ என்று பேரறிஞர் அண்ணா கூறியதை நினைவுகூர்ந்த ஆ.ராசா, பிற்காலத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அதனை மேலும் செழுமைப்படுத்தியதைச் சுட்டிக்காட்டினார். “ஒரு துப்பாக்கியின் ஒரு குழல் வெடித்து, இன்னொரு குழலில் ரவை வராமல் போனாலும் போகலாம். ஆனால், நாணயத்தின் இரண்டு பக்கங்கள் இருந்தால்தான் அந்த நாணயம் செல்லும். அதுபோல, திமுக என்ற நாணயம் செல்ல வேண்டும் என்றால், அதற்கு மறுபக்கமாக திராவிடர் கழகம் இருக்க வேண்டும்” என்று கலைஞர் மாற்றியமைத்துக் கூறிய உன்னதக் கொள்கையை மேடையில் விவரித்தார்.
75 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சிந்தனை, ஒரே போக்குடன் இந்தியாவில் ஏதேனும் ஒரு இயக்கம் தொடர்ந்து கம்பீரமாகச் செயலாற்றுகிறது என்றால், அது தந்தை பெரியார் மற்றும் அண்ணாவின் அடையாளத்தைக் கொண்ட திராவிட இயக்கம்தான் என்றும், இந்த அடையாளமே நாடாளுமன்றத்தில் தங்களைச் சிறப்பாக வேறுபடுத்திக் காட்டுகிறது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
கொள்கையற்ற புதிய அரசியல் சக்திகள்:
தற்போதைய அரசியல் கள நிலைவரம் குறித்துப் பேசிய அவர், “முன்பெல்லாம் களத்தில் எதிரிகள் யார் என்று நமக்குத் தெரியும், அவர்களின் கொள்கைகளும் நமக்குத் தெரியும். ஆனால் இப்போது ஒரு அரசியல் சக்தி கிளம்பி இருக்கிறது. கொள்கைத் தலைவர்கள் என்று ஒரு ஐந்து பேரை மட்டும் படம் பிடித்து வைத்திருக்கிறார்கள். அந்த முகங்கள் தெரிகிறதே தவிர, அவர்களின் கொள்கை என்னவென்று அவர்களுக்கே தெரியவில்லை. கொள்கையின் பெயரால் மக்களை ஏமாற்ற ஒரு இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு, ஆட்சி அதிகாரத்தைக் குறிவைக்கும் இந்தச் சூழல் மிகவும் ஆபத்தானது” என்று எச்சரித்தார்.
மேலும் படிக்க: பிஸ்கட் சாப்பிடுவதில் தம்பியுடன் தகராறு.. 15 வயது சிறுமியின் விபரீதமான முடிவு.. திண்டுக்கல்லில் சோகம்!
மதச்சார்பின்மைக்கு வந்துள்ள ஆபத்து:
இந்தியாவின் இறையாண்மைக்கும், மதச்சார்பின்மைக்கும் பெரிய ஆபத்து வந்துள்ள இந்த அரசியல் குழப்பமான சூழலில், தந்தை பெரியாரின் கொள்கைகள் முன்பை விட இப்போதுதான் மிக வீரியமாகத் தேவைப்படுகின்றன. “சூத்திரப் பட்டம் விலகி, உழைக்கும் மக்கள் சமத்துவம் பெறும் வரை என் கொள்கை உழைப்பை நிறுத்த மாட்டேன்” என்று தனது 93 வது வயதில் பெரியார் முழங்கியதை நினைவு கூர்ந்த ராசா, அதே வழியில் தற்போதைய திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியும் இந்தச் சமுதாயத்திற்காகத் தொடர்ந்து உழைத்து வருவதாகப் பாராட்டினார். இறுதியாக, கொள்கை ரீதியாகத் தமிழர் தலைவரின் பின்னாலும், அரசியல் ரீதியாகத் தமிழ்நாட்டை வழிநடத்தி வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பின்னாலும் அணிவகுத்து நின்று தொடர்ந்து போராடி வெல்வோம் என்று கூறி மணமக்களை வாழ்த்தித் தனது உரையை நிறைவு செய்தார்.