“இந்தியா கூட்டணியை திமுக என்றும் ஆதரிக்கும்”.. நம்பிக்கை தெரிவித்த ராகுல் காந்தி!
திமுக-வின் நிலைப்பாடு குறித்து அவர் பேசுகையில், "இந்தியாவின் உன்னதமான தத்துவங்களையும் பன்முகத்தன்மையையும் பாதுகாக்கும் விஷயம் என்று வரும்போது, இந்த அறையில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து நிற்பார்கள். குறிப்பாக, இதில் திமுக-வின் பங்களிப்பு மற்றும் அவர்களின் உறுதியான ஆதரவு குறித்து என்னால் 100 சதவீதம் இப்போதே உறுதியளிக்க முடியும்" என்று மிகவும் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
டெல்லி, ஜுன் 13: இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதில், திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ (INDIA) கூட்டணிக்குத் துணையாக நிற்கும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி உறுதியான நம்பிக்கை தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணி முறிந்ததாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய ஒரு அரசியல் சூழல் நிலவி வரும் வேளையில், டெல்லியில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிய உரை பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிக்க: அதிமுக தேர்தல் தோல்வி, கட்சித் தாவல் நெருக்கடி.. ‘ஜெயலலிதா பாணியில்’ இபிஎஸ் ஆலோசனைக் கூட்டம்!
திமுக என்றும் ஆதரிக்கும்:
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தின் போது ராகுல் காந்தி பேசிய உரையின் ஒரு பகுதியை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில், தேர்தல் தற்காலிகமாகப் பிரிவை ஏற்படுத்தியிருந்தாலும், கொள்கை அளவில் ‘இந்தியாவை மாற்றுவது மற்றும் பாதுகாப்பது’ என்ற பொது நோக்கில் திமுக தங்களுக்கு ஆதரவளிக்கும் என்ற தொனியில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
பாஜக-வின் பொய் பிரச்சாரத்திற்குப் பதில்:
கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “எதிர்க்கட்சிகளுக்குள் எந்தவித ஒற்றுமையும் இல்லை; அவர்கள் இணைந்து செயல்பட மாட்டார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியும் (BJP) அவர்களுக்கு ஆதரவான ஊடகங்களும் தொடர்ந்து பொய் பிரச்சாரங்களைச் செய்து வருகின்றன. மக்கள் இந்தத் தவறான கருத்துக்களை முற்றிலும் புறந்தள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
திமுக மீது 100% உறுதி:
மேலும், திமுக-வின் நிலைப்பாடு குறித்து அவர் பேசுகையில், “இந்தியாவின் உன்னதமான தத்துவங்களையும் பன்முகத்தன்மையையும் பாதுகாக்கும் விஷயம் என்று வரும்போது, இந்த அறையில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து நிற்பார்கள். குறிப்பாக, இதில் திமுக-வின் பங்களிப்பு மற்றும் அவர்களின் உறுதியான ஆதரவு குறித்து என்னால் 100 விழுக்காடு இப்போதே உறுதியளிக்க முடியும்” என்று மிகவும் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: கர்நாடகா சென்ற முதல்வர் விஜய்.. கறுப்புக்கொடி காட்ட முயன்ற கன்னட அமைப்பினர்.. காரணம் தெரியுமா?..
கடந்த திங்கட்கிழமையன்று நடைபெற்ற இந்த ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தில் திமுக தரப்பிலிருந்து பிரதிநிதிகள் யாரும் பங்கேற்காத போதும், ராகுல் காந்தி திமுக மீது இத்தகைய அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பது, தேர்தல் கூட்டணிகளைத் தாண்டி தேசிய அளவில் இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள கொள்கை ரீதியான பிணைப்பைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.