“ரூ.10,000 வரை உயர்ந்த சம்பளம்!”.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடித்தது யோகம்.. வெளியான அதிரடி அறிவிப்பு!
TASMAC Employees Salary Hike: தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு, அது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் என ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பயனடைவர்.
சென்னை, செப்.24: தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (டாஸ்மாக்) பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டு அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சட்டமன்றப் பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, டாஸ்மாக் நிர்வாகம் தற்போது இந்த ஊதிய உயர்வுக்கான சுற்றறிக்கையை அனுப்பி நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய ஊதிய உயர்வு செப்டம்பர் 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் டாஸ்மாக் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிக்க: தவெக அமைச்சர்கள் வங்கி கணக்கை ரகசியமாக கண்காணிக்கும் முதல்வர் விஜய்.. என்ன காரணம்.. என். ஆனந்த் விளக்கம்!
விற்பனையாளர்களுக்கான புதிய ஊதியம்:
டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள விவரங்களின்படி, டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் ஆகிய அனைவருக்கும் குறிப்பிடத்தக்க அளவில் மாத ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக ரூ.22,313 ஆக இருந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர்களின் ஊதியம், தற்போது ரூ.10,710 உயர்த்தப்பட்டு இனி மாதந்தோறும் ரூ.33,023 ஆகக் கிடைக்கும். அதேபோல, முன்பு ரூ.19,413 பெற்று வந்த விற்பனையாளர்களுக்கு ரூ.10,871 உயர்த்தப்பட்டு, இனி அவர்களின் மாத ஊதியம் ரூ.30,284 ஆகக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி விற்பனையாளர்களுக்கான பலன்கள்:
இதேபோன்று, உதவி விற்பனையாளர்களாகப் பணியாற்றி வருவோருக்கு முன்பு வழங்கப்பட்டு வந்த ரூ.17,925 என்ற ஊதியத்திலிருந்து கூடுதலாக ரூ.10,755 உயர்த்தப்பட்டு, இனி அவர்களின் புதிய மாதாந்திர ஊதியம் ரூ.28,680 ஆக உயர்ந்துள்ளது. சட்டப்பேரவையில் அமைச்சர் அளித்த வாக்குறுதியைத் தாமதமின்றி உடனடியாகச் செயல்படுத்தும் நோக்கில், டாஸ்மாக் தலைமையகம் இந்த விரிவான சுற்றறிக்கையைக் மாவட்ட மேலாளர்கள் மற்றும் அனைத்துப் பிரிவு அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் மாநிலம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பயன்பெறும்.
இதையும் படிக்க: தாராபுரத்தில் விஜய்யின் மாஸ்.. பாஸ் ஆகாது.. தொகுதி மக்கள் கொத்து பரோட்டா போடுவது உறுதி.. ஆர்.பி. உதயகுமார் அட்டாக்!
ஊழியர்களின் வரவேற்பும் நிர்வாகத்தின் நடைமுறையும்:
நீண்ட நாட்களாகப் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கேட்டுப் போராடி வந்த டாஸ்மாக் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது. செப்டம்பர் 1 முதல் கணக்கிடப்பட்டு இந்த ஊதிய உயர்வு நிலுவைகளுடன் சேர்த்து ஊழியர்களின் கணக்கில் செலுத்தப்படும் என்பதால், டாஸ்மாக் பணியாளர்கள் தங்களது நன்றியினைத் தெரிவித்து வருகின்றனர். அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருவதன் ஒரு பகுதியாகவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.