நடைமுறைக்கு வந்தது ஆன்லைனில் மது விற்பனை.. ரூ.10 கூடுதல் கட்டண புகாருக்கு செக்.. அமைச்சர் விக்னேஷ் அதிரடி!!
Online Liquor Sale Tamil Nadu: ஆன்லைனில் மது விற்பனை செய்யும் புதிய திட்டம் தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்திட்டம் அமலுக்கு வந்த முதல் நாளிலேயே 700க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் வாயிலாக மதுபானங்களை ஆர்டர் செய்து பெற்றுள்ளதாகவும் அவர் தகவல் அளித்துள்ளார்.
சென்னை, ஆகஸ்ட் 08: தமிழ்நாட்டில் ஆன்லைன் வாயிலாக மதுபானங்களை ஆர்டர் செய்து வாங்கும் புதிய நடைமுறை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுச் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விக்னேஷ், இப்புதிய திட்டத்தின் தற்போதைய நிலை, பயன்பாடு மற்றும் அதில் நிலவும் தொழில்நுட்பச் சிக்கல்கள் குறித்து விரிவாகப் பேசினார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “ஆன்லைன் மூலம் மதுபான விற்பனை செய்யும் முறை இன்றிலிருந்து முழுமையாக நடைமுறைக்கு வந்துவிட்டது. இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளான இன்றைக்கு மட்டுமே, இதுவரை கிடைத்த அதிகாரப்பூர்வ தகவல்களின்படி 700க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஆன்லைன் செயலி வழியாக வெற்றிகரமாக ஆர்டர் செய்து மதுபானங்களைப் பெற்றுள்ளனர்” என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: “டாஸ்மாக்கில் அதிகக் கட்டணம் வசூலித்தால் போலீசில் புகார் அளிக்கலாம்!”.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
நடைமுறைச் சிக்கல்களும் உடனடி தீர்வும்
மேலும், இத்திட்டத்தில் உள்ள சில குறைபாடுகளை ஒப்புக் கொண்ட அமைச்சர், “ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு கடைகளுக்கு நேரில் சென்று கேட்கும்போது, வாடிக்கையாளர்கள் கோரும் குறிப்பிட்ட மதுபான வகைகள் சில கடைகளில் இருப்பு இல்லாத நிலை நிலவுவது போன்ற சில நடைமுறைச் சிக்கல்கள் எங்களது கவனத்திற்கு வந்துள்ளன. இது ஒரு புதிய முயற்சி என்பதால் ஆரம்பகட்டத்தில் இதுபோன்ற சில பிரச்சனைகள் எழுவது இயல்புதான். அனைத்துச் சிக்கல்களையும் கூர்ந்து கவனித்து வருகிறோம்; விரைவில் இக்குறைகள் அனைத்தும் கண்டறியப்பட்டு முழுமையாகச் சரிசெய்யப்படும்” என்று உறுதியளித்தார்.
ஹோம் டெலிவரி கிடையாது அமைச்சர் திட்டவட்டம்:
இத்திட்டம் மூலம் வீட்டிற்கே மதுபானங்கள் விநியோகம் செய்யப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சரின் விளக்கம், “இது எந்த வகையிலும் வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யும் ‘ஹோம் டெலிவரி’ திட்டம் அல்ல. மதுப் பழக்கத்தை அரசு ஒருபோதும் ஊக்குவிக்காது. கடைகளில் நேரில் சென்று க்யூஆர் (QR Code) மூலம் ஸ்கேன் செய்து, பில் தொகையை மட்டும் செலுத்திப் பொருளைப் பெற்றுக்கொள்வதற்கான பணமில்லா பரிவர்த்தனை வசதி மட்டுமே இது.” என்றார்.
ரூ.10 கூடுதல் கட்டணப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி:
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தொடர் புகார்கள் எழுந்தது குறித்துப் பேசிய அமைச்சர், கடைகளில் ஏற்கெனவே ஜிபே, ஸ்வைப்பிங் மெஷின்கள் இருந்தாலும், ரூ.10 கூடுதல் கட்டணப் பிரச்சனை நீடித்துக்கொண்டே இருந்தது.
ஆன்லைன் வெப்சைட்/செயலி மூலம் ஆர்டர் செய்து கட்டணம் செலுத்துவதன் மூலம், நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் ஒரு ரூபாய் கூட கூடுதலாகச் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. சில கடைகளில் குறிப்பிட்ட பிராண்டுகள் இருப்பில் இருந்தாலும் “இல்லை” என்று கூறி வேறு பிராண்டுகளை விற்கும் முறைகேடுகளைத் தடுக்க, எந்தக் கடையில் என்னெந்த பிராண்ட் மதுபானங்கள் உள்ளன என்பதை வாடிக்கையாளர்கள் வெளிப்படையாகத் தெரிந்துகொள்ள இது வழிவகுக்கும் என்றார்.
இதையும் படிக்க: “எங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்வதா?”.. 98 மலை கிராம மக்கள் தேனியில் திரண்டு வீதி மறியல்!!
வெளிநாட்டு மதுபானங்கள் இறக்குமதி:
வெளிநாட்டு மதுபானங்கள் மீண்டும் கொண்டுவரப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “டாஸ்மாக் துறையில் எந்த நிறுவனமும் தனிப்பட்ட ஏகபோக உரிமையை வைத்திருக்கக் கூடாது. நுகர்வோர் விரும்புவதை வழங்குவது அரசின் கடமை என்பதால், வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை தொடர்பாகவும் படிப் படியாகப் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.