AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“டாஸ்மாக்கில் அதிகக் கட்டணம் வசூலித்தால் போலீசில் புகார் அளிக்கலாம்!”.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுப்பது மற்றும் ரசீது வழங்குவதைக் கட்டாயமாக்குவது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் மிகவும் முக்கியமான வழிகாட்டுதல்களையும் அதிரடி உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. அத்துடன், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் இத்தகைய புகார்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.

“டாஸ்மாக்கில் அதிகக் கட்டணம் வசூலித்தால் போலீசில் புகார் அளிக்கலாம்!”.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
டாஸ்மாக் கடை
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 07 Aug 2026 14:05 PM IST

சென்னை, ஆகஸ்ட் 07: தமிழ்நாட்டில் மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) கீழ் இயங்கி வரும் சில்லறை மதுபானக் கடைகளில், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை (MRP) விட பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் காலங்காலமாகப் பல்வேறு குற்றச்சாட்டுகளும் புகார்களும் எழுந்தவண்ணம் உள்ளன. இந்த சட்டவிரோதக் கூடுதல் கட்டண வசூலைத் தடுக்கக் கோரியும், அனைத்துக் கடைகளிலும் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு முறைப்படி கணினி அல்லது அச்சு ரசீது வழங்குவதைக் கட்டாயமாக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் காவல் துறையினருக்குத் தெளிவான பல அதிரடி வழிகாட்டுதல்களையும் உத்தரவுகளையும் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இதையும் படிக்க: “எங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்வதா?”.. 98 மலை கிராம மக்கள் தேனியில் திரண்டு வீதி மறியல்!!

காவல்துறையில் புகார் அளிக்கலாம்:

டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் கூடுதல் கட்டண வசூல் முறைகேடுகள் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகக் கட்டணம் பெறப்படுவதைத் தடுத்து நிறுத்தத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. டாஸ்மாக் கடைகளில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்தாலும், பாதிக்கப்பட்ட நபர் அல்லது பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க முழு உரிமை உண்டு என நீதிமன்றம் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், அவ்வாறு பெறப்படும் புகார்களின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, காவல்துறையினர் எவ்விதத் தாமதமும் இன்றி உடனடியாக வழக்குப் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் என்றும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரசீது தருவதில் டாஸ்மாக்கில் என்ன பிரச்சனை?”

மதுபான விற்பனையின் போது வாடிக்கையாளர்களுக்கு ரசீது வழங்குவது தொடர்பாகவும், அதில் நிலவும் தயக்கங்கள் குறித்தும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மிகக் கடுமையான கருத்துக்களைப் பதிவு செய்தனர். அன்றாட வாழ்க்கையில் மக்கள் செல்லும் ஒரு சாதாரண சூப்பர் மார்க்கெட்டில் மிகக் குறைந்த விலையுள்ள டூத் பிரஷ் போன்ற பொருட்களை வாங்கும் போது கூட, அதன் சரியான விலை மற்றும் வரிகளுடன் கூடிய ரசீது உடனடியாக வழங்கப்படுகிறது என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். அவ்வாறிருக்கையில், தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டித் தரும் மிகப்பெரிய அமைப்பான டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்குவதில் என்ன நடைமுறைச் சிக்கல் இருக்கிறது என்று கேள்வி எழுப்பிச் சாடினர்.

டாஸ்மாக் நிர்வாகத்தின் விளக்கம்:

உயர் நீதிமன்றத்தின் காரசாரமான கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய டாஸ்மாக் நிர்வாக வழக்கறிஞர், டாஸ்மாக் கடைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய நிர்வாகம் பல கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துச் சில்லறை மதுபானக் கடைகளிலும் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் போது வாடிக்கையாளர்களுக்குக் தவறாமல் விற்பனை ரசீது வழங்கப்பட வேண்டும் என்று அனைத்துக் கடை ஊழியர்களுக்கும், மாவட்ட மேலாளர்களுக்கும் ஏற்கனவே சுற்றறிக்கை வாயிலாகத் தெள்ளத் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ரசீது வழங்க மறுக்கும் அல்லது கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஊழியர்கள் மீது துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இதையும் படிக்க: தவெக அரசுக்கு திமுக வைத்த செக்.. முதல்வர் விஜய் அழைத்துள்ள எம்.பிக்கள் கூட்டத்தில் பங்கேற்க திமுக நிபந்தனை!!

கூட்ட நெரிசலுக்கு காவல்துறை பாதுகாப்பு:

மேலும், விடுமுறை நாட்கள் மற்றும் மால நேரங்களில் அதிக அளவில் மக்கள் கூடும் பிரதான டாஸ்மாக் கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது குறித்தும் நீதிமன்றம் கவனம் செலுத்தியது. அதிக கூட்ட நெரிசல் காணப்படும் கடைகளில் வாடிக்கையாளர்களிடையே மோதல்கள் அல்லது சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாத வண்ணமும், முறையான வரிசையைப் பராமரிக்கும் பொருட்டும் தகுந்த எண்ணிக்கையிலான காவல் துறையினரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று மாவட்ட காவல் நிர்வாகத்திற்கும் அதிகாரிகளுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Follow Us