“எங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்வதா?”.. 98 மலை கிராம மக்கள் தேனியில் திரண்டு வீதி மறியல்!!
Massive Protest by 98 Hill Villages: ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள 98 மலை கிராமங்களைச் சேர்ந்த மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி வெளியேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைக் கண்டித்து, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தேனி, ஆகஸ்ட் 07: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட மேகமலை, வருசநாடு மற்றும் தும்மக்குண்டு உள்ளிட்ட 8 ஊராட்சிகளில் உள்ள 98 மலை கிராம மக்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, அதற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: தவெக அரசுக்கு திமுக வைத்த செக்.. முதல்வர் விஜய் அழைத்துள்ள எம்.பிக்கள் கூட்டத்தில் பங்கேற்க திமுக நிபந்தனை!!
மலை கிராம மக்களின் ஆதங்கம்:
ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் மற்றும் மேகமலை வனச்சரணாலயத்தை இணைத்து கடந்த 2021-ஆம் ஆண்டு ‘மேகமலை புலிகள் காப்பகம்’ உருவாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அங்குள்ள அடிவார கிராம மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி ஆகஸ்ட் மாதத்திற்குள் அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், அங்கு 3 தலைமுறைகளாக 26,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அரசு அமைத்துக் கொடுத்த பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், குடிநீர் தொட்டிகள் மற்றும் ரேஷன் கார்டுகள் அனைத்தும் உள்ள நிலையில், தங்களை ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என்று கூறி வெளியேற்ற முற்படுவதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தேனியில் ஸ்தம்பித்த போக்குவரத்து:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 98 கிராமங்களைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புள்ள நெடுஞ்சாலை மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது; போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது.
முன்வைத்த முக்கியக் கோரிக்கைகள்:
மலை கிராம மக்களை இருப்பிடத்தை விட்டு எந்தக் காரணம் கொண்டும் அப்புறப்படுத்தக் கூடாது. பல தலைமுறைகளாக வசிக்கும் மக்களுக்கு உடனடியாக மனைகளுக்கான பட்டா வழங்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு உடனடியாகச் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகள் முக்கியமானதாக வைக்கப்பட்டது.
தமிழக அரசின் முக்கிய உறுதி:
ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய கம்யூனிஸ்ட் தலைவர், “2006-ஆம் ஆண்டின் வன உரிமைச் சட்டம் பழங்குடியினருக்கு மட்டுமல்லாமல், வனத்தைச் சார்ந்து வாழும் அனைத்துச் சமூகத்தினருக்கும் பொருந்தும். இச்சட்டத்தின் கீழ் வன உரிமைகளை முழுமையாக அமல்படுத்தாமல் மக்களை வெளியேற்றக் கூடாது” என்றார்.
இதையும் படிக்க: “பேப்பர் படித்திருந்தால் தெரிந்திருக்கும்!”.. சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் பதிலடி!
மேலும், நேற்றைய தினம் தமிழக சட்டத்துறை அமைச்சர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதைச் சுட்டிக்காட்டிய அவர், “தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்; அவ்வழக்கு முடிவுக்கு வரும் வரை எந்தவொரு நபரையும் அவர்களின் நிலத்திலிருந்தோ அல்லது இருப்பிடத்திலிருந்தோ அப்புறப்படுத்த மாட்டோம் எனச் சட்டத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்” என்ற தெரிவித்தார்.