தவெகவினர் எல்லை மீறக்கூடாது.. அரசு விவகாரங்களில் தலையிடக்கூடாது.. பொதுச் செயலாளர் ஆனந்த் திடீர் எச்சரிக்கை!
TVK General Secretary Anand : தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது என்றும், தங்களது எல்லை அறிந்து செயல்பட வேண்டும் என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார் .
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் தமிழக வெற்றிக் கழகத்தின் மருத்துவ அணி நிர்வாகிகள் சிலர் மருத்துவர்கள் பயன்படுத்தும் வெள்ளை நிற கோட்டுடன் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருந்துகள் எவ்வளவு இருப்பு உள்ளது என்பன உள்ளிட்ட கேள்விகளை மருத்துவமனை பணியாளர்களிடம் கேட்டிருந்தனர். இந்த விவகாரம் செய்திகளாக வெளியான நிலையில் மக்கள் பிரதிநிதிகளாகவோ அல்லது அரசு ஊழியர்களாகவோ இல்லாத இவர்கள் எதன் அடிப்படையில் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர் என்பது போன்ற கடும் கண்டனங்கள் பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்து எழத் தொடங்கியது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொது செயலாளரும், அமைச்சருமான என். ஆனந்த் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தவெகவினர் அரசு விவகாரங்களில் தலையிடக்கூடாது
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அரசு சார்ந்த விவகாரங்களில் எந்த காரணம் கொண்டும் தலையிடக்கூடாது. தமிழக வெற்றி கழகத்தின் தோழர்கள் தங்களுடைய எல்லை என்ன என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும். அதிலும், மக்கள் பிரதிநிதிகளாக இல்லாத நமது கட்சியினர் அரசு சார்ந்த விவகாரங்கள், நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எவற்றிலும் தலையிடவோ அல்லது ஆய்வுகளை மேற்கொள்ளவோ கூடாது.
மேலும் படிக்க: அமைச்சர் தரிசனத்தில் ஆகம விதி மீறப்பட்டதா? திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் நீதிமன்றம் விளக்கம் கேட்பு!




முதல்வர் நற்பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடாது
முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நடந்து கொள்ள வேண்டும். இதுவே நமது கடமை ஆகும். முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய ஆட்சி அமைந்துள்ள சூழ்நிலையில் நமக்கான பொறுப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, மக்கள் சேவையை தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். பொறுப்புணர்வுடன் செயல்படுங்கள் என்று தெரிவித்து உள்ளார்.
தவெக மருத்துவ அணி நிர்வாகிகள்
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட சில ஆண்கள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அங்கிருந்த ஊழியர்களிடம் நாங்கள் தமிழக வெற்றி கழகத்தின் மருத்துவ அணியே சேர்ந்த நிர்வாகிகள் என அறிமுகம் செய்து கொண்டனர். மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டதுடன், இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்தனர். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், தமிழக வெற்றி கழகத்தினர் அரசு விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க: முதல்வர் விஜய்யின் ஆலோசகராக ஜான் ஆரோக்கிய சாமி – விஷ்ணு ரெட்டி நியமனம்?