விசிக வன்னி அரசு – ஐயூஎம்எல் ஷாஜகானுக்கு துறைகள் ஒதுக்கீடு!
VCk Vanni arasu - IUML Shahjahan: தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் இன்று புதிதாக பொறுப்பேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஷாஜகான் ஆகியோருக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் புதிய அரசாக தமிழக வெற்றி கழகம் கடந்த மே 10- ஆம் தேதி பொறுப்பேற்றது. அப்போது, முதல்வர் ஜோசப் விஜய் உள்பட 10 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இதைத் தொடர்ந்து, சுமார் ஒரு வாரத்துக்கு பிறகு அவர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மீதமுள்ள துறைகளுக்கு அமைச்சர்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்த நிலையில், அதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால், சம்பந்தப்பட்ட துறைகள் தொடர்பான கோப்புகள் அமைச்சர்களின் கையெழுத்து பெறாமல் கிடப்பில் கிடந்து வந்தன. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 21 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் என மொத்தம் 23 எம்எல்ஏக்கள் தமிழக ஆளுநர் மாளிகையில் நேற்று ( வியாழக்கிழமை) அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இந்த அமைச்சர்களுக்கு பல்வேறு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டது.
அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு
இந்த நிலையில், தமிழக ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திண்டிவனம் தொகுதி எம்எல்ஏவான வன்னி அரசு அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதேபோல, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பாபநாசம் தொகுதி எம்எல்ஏவான ஷாஜகான் அமைச்சராக பதவி ஏற்றார். இருவருக்கும் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதில், வன்னி அரசுக்கு சமூக நீதித்துறை, ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலன் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: முதல்வர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய விவகாரம்.. தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
விசிக – ஐயூஎம்எல் கட்சிக்கு அமைச்சர் பதவி
தமிழக அமைச்சரவையில் இந்த இரு துறைகள் மட்டும் எந்த அமைச்சருக்கும் ஒதுக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த துறைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. அதன் அடிப்படையில், இரு கட்சிகளின் உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக வெற்றிக்கழக அமைச்சரவையில் பங்கேற்பது என இரு கட்சிகளும் தனித்தனியாக அறிவித்திருந்தன.
தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் 35 அமைச்சர்கள்
அதன்படி, வன்னி அரசு மற்றும் ஷாஜகான் ஆகிய இருவரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இதை தொடர்ந்து, இரு அமைச்சர்களுக்கான துறைகளை தமிழக ஆளுநர் மாளிகை ஒதுக்கி உத்தரவிட்டது. அதன்படி, தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் 35 அமைச்சர்கள் உள்ளனர். அவர்களுக்கான துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: தவெக அமைச்சரவையில் விசிக, ஐயூஎம்எல்.. பதவியேற்ற வன்னியரசு, ஷாஜகான்!!


