சிங்க பெண்கள் சிறப்பு அதிரடி படைக்கு பிரத்யேக சீருடை.. தனி காவல் நிலையத்துடன் மாஸ் என்ட்ரி?
Singappen Special Task Force : தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பெண்கள் பாதுகாப்புக்கான சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப் படையில் ஈடுபடும் காவலர்களுக்கு பிரத்யேகமான லோகோவுடன் தனி சீருடை மற்றும் காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன .
தமிழக சட்டமன்ற தேர்தலின் போது, தமிழக வெற்றி கழகம் சார்பில் பெண்கள் பாதுகாப்புக்காக சிங்க பெண் சிறப்பு அதிரடி படை அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழக வெற்றி கழகம் ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாளில் முதல்வர் ஜோசப் விஜய் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை உள்ளிட்ட 3 திட்டங்களுக்கு முதல் கையெழுத்து இட்டார். அதன்படி, தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக சிங்கப் பெண்கள் சிறப்பு பாதுகாப்பு படை அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ஐஜி தலைமையில் ஒரு பெண் இன்ஸ்பெக்டர், காவலர்கள் என பணியில் இருப்பார்கள். இவர்களுக்கென தனியாக கார், தகவல் தொடர்பு சாதனம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் முதல் முறையாக சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது.
சிங்க பெண்கள் படைக்கு பிரத்யேக சீருடை
இதைத் தொடர்ந்து, மற்ற மாவட்டங்களிலும் இந்த படை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படையில் ஈடுபடும் காவலர்களுக்கு பிரத்தியேகமான லோகோவுடன், புதிய சீருடை வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சக காவலர்களிடம் இருந்து தனித்துவமாக அடையாளப்படுத்தும் வகையில் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படையில் ஈடுபட உள்ள காவலர்களுக்கு பிரத்தியேக லோகோ மற்றும் சீருடை தயார் செய்யப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: புதிய அமைச்சர்களுக்கு என்ன இலாக்காக்கள்? துறை வாரியாக முழு விவரம்!




தனி காவல் நிலையம் – பணி விவரங்கள்
மேலும், கோயம்புத்தூர் மாநகரில் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படைக்கு 2 குழுக்கள் மற்றும் கிராம பகுதிகளில் 1 குழு தயார் நிலையில் உள்ளது. இதில், சிறப்பு படை காவலர்களுக்கான செயல்பாடுகள், அவர்களுக்கான பணி விபரங்கள், தனி காவல் நிலையம் உள்ளிட்டவை அமைக்கப்படுவது தொடர்பாக அரசு சார்பில் உரிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை காவலர்களுக்கு தனி காவல் நிலையம் மற்றும் சீருடை வழங்கப்படும் என்று தெரிகிறது.
சிங்க பெண்கள் படைக்கு ஐஜி நியமனம்
தமிழகத்தில் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படைக்கு ஐஜியாக பவானிஸ்வரி ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2002- ஆம் பேட்சை சேர்ந்த இவர் மேற்கு மண்டல ஐஜி- ஆகவும், காவல்துறை தலைமையக ஐஜியாகவும் பணியாற்றியுள்ளார். மேலும், காவல்துறையில் சிறந்து செயல்பட்ட காரணத்துக்காக கடந்த 2023- ஆம் ஆண்டு மத்திய அரசு சார்பில் குடியரசு தலைவரின் சிறப்புமிக்க சேவை என்ற பதக்கம் மற்றும் 2017 ஆம் ஆண்டு தகுதியான சேவை என்ற பழக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தவெக அமைச்சரவையில் இடம் பெற்ற 7 பட்டியலின அமைச்சர்கள்.. மாவட்டம் வாரியாக அமைச்சர்கள் விவரம்!